ஓட்டல், குடிநீர்சுத்திகரிப்பு நிலையங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஓட்டல், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சந்திரமோகன், ராஜ்குமார், மகேஷ், கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமார், வடிவேல், பாண்டி, உமாகேசன், மகாதேவன், செந்தில் கொண்ட குழுவினர் தஞ்சையில் டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சை மருத்துவகல்லூரி சாலையில் உள்ள ஓட்டல்கள், பேக்கரி, குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், தேநீர் விடுதிகள் உள்ளிட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது டெங்கு கொசு உற்பத்தி ஆகும் இடங்களை ஆய்வு செய்து உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கும் பணி நடைபெற்றது. இந்த ஆய்வின் போது காலாவதியான உணவுப்பொருட்கள், குளிர்பானங்களும் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.
இது குறித்து நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு கூறுகையில், ‘‘டெங்கு காய்ச்சல் கொசு மூலம் பரவக்கூடியது ஆகும். டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு பகல் நேரத்தில் கடிக்கக்கூடியது ஆகும். இந்த கொசு குறைந்த அளவு சுத்தமான நீர் உள்ள இடங்களில் உற்பத்தியாகும். உதாரணமாக டீ கப், ஆட்டு உரல், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் மூடிகள் போன்றவைகளில் உற்பத்தியாகும்.
இது போன்ற பொருட்களில் நீர் தேங்காமல் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழித்து டெங்கு பரவுவதை தடுப்பதற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் வணிகர்கள் சுகாதாரமான முறையில் உணவு வணிகங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’என்றார்.