மருத்துவமனை இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


மருத்துவமனை இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 20 July 2017 4:00 AM IST (Updated: 20 July 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

காரை பகுதியில் உள்ள தாலுகா மருத்துவமனையை இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம் ஆலுத்தூர் தாலுகா காரை பகுதியில் கிராம மக்களுக்கு மருத்துவ சேவையினை வழங்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமானது தாலுகா மருத்துவமனையாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது. காரை மருத்துவமனை மூலம் புதுக்குறிச்சி, தெரணி, காரை, சமத்துவபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் காரை மருத்துவமனையை பார்வையிட்ட மருத்துவநலப்பணி அதிகாரிகள் அதனை இடமாற்றம் செய்து பாடாலூருக்கு கொண்டு வருவதற்கான பணியில் மும்முரமாக இறங்கினர்.

இந்த நிலையில் காரை மருத்துவமனையை பாடாலூருக்கு இடமாற்றம் செய்வதற்கான உத்தரவு நகலை வழங்குவதற்காக மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் செல்வராஜன் மற்றும் அதிகாரிகள் நேற்று அங்கு வந்தனர். பின்னர் உத்தரவு நகல் காரை மருத்துவமனை நிர்வாக அலுவலரிடம் வழங்கப்பட்டது.

இதனையறிந்த காரை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், காரை மருத்துவமனையானது பாடாலூருக்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தனர். பின்னர் மக்கள் திரண்டு வந்து காரை மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்து கொண்டிருந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கையை கூறுமாறு மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பாடாலூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென விபத்து ஏற்பட்டால் உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாகவே இந்த மருத்துவமனை மாற்றப்படுகிறது என அதிகாரிகள் எடுத்து கூறினர். எனினும் கிராம மக்களுக்கு மருத்துவமனை மாற்றப்படுவதில் உடன்பாடு ஏற்படவில்லை.

மேலும் அந்த கிராம மக்கள் நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மருத்துவமனை இடமாற்றம் செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர். அப்போது அங்கிருந்த போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் சாந்தாவிடம் நேரடியாக மனு கொடுத்து கோரிக்கையை வலியுறுத்தினர். அப்போது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.


Next Story