வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சலுகைக்கட்டண பாஸ்களை முன்பதிவு செய்யும் காலம் நீட்டிப்பு


வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சலுகைக்கட்டண பாஸ்களை முன்பதிவு செய்யும் காலம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 20 July 2017 4:30 AM IST (Updated: 20 July 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான “இந்த்ரெயில்“ சலுகை கட்டண பாஸ்களை 365 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

பஸ், ரெயில்களில் மாதாந்திர, வருடாந்திர சீசன்டிக்கெட் பெறும் வசதி உள்ளது. பஸ்களில் மாதாந்திர பாஸ், மாணவர்களுக்கான சலுகை கட்டண பாஸ், எந்த பஸ்களில் வேண்டுமானாலும் பயணம் செய்ய ஒரு நாள் மட்டுமே செல்லத்தக்க பாஸ் வழங்கப்படுகிறது.

அதேபோல, ரெயில்களிலும் மாதாந்திர மற்றும் காலாண்டு பாஸ்கள் கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சலுகை கட்டண பாஸ் ரெயில்களில் மட்டும் வழங்கப்படுகிறது.

இந்த பாஸ்கள் ரெயில்வே மற்றும் ரெயில்வே அங்கீகாரம் பெற்ற ஏஜெண்டுகள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாஸ்களை வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெற்று கொள்ளலாம்.

‘இந்த்ரெயில் பாஸ்‘ என்ற பெயரில் இந்த சலுகை கட்டண டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த சலுகை கட்டண டிக்கெட் வைத்திருப்பவர்கள் இந்தியாவின் எந்த மூலைக்கும், எந்த ரெயிலிலும் பயணம் செய்யலாம். முன்பதிவு கட்டணம், சூப்பர்பாஸ்ட் கட்டணம், பாதுகாப்பு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. ராஜதானி மற்றும் சதாப்தி ரெயில்களில் வழங்கப்படும் உணவுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த இந்த்ரெயில் பாஸ் கட்டணத்தை அமெரிக்க டாலர் அல்லது இங்கிலாந்து நாட்டு கரன்சியான பவுண்டில் மட்டுமே செலுத்த வேண்டும்.

“இந்த்ரெயில்“ பாஸ்கள் ரெயில் புறப்படும் நேரத்தில் இருந்து கணக்கிடப்படும். 2–ம் வகுப்புக்கான இந்ந்ரெயில் பாஸ்கள் ராஜதானி மற்றும் சதாப்தி ரெயில்களில் செல்லாது. இந்த பாஸ்கள் தமிழகத்தில் சென்னை மற்றும் ராமேசுவரம் ரெயில்நிலையங்களில் மட்டுமே கிடைக்கும். பஹ்ரைன், கொழும்பு, ஜெர்மனி, ஓமன், ஐக்கிய அரபு குடியரசு, இங்கிலாந்து மற்றும் நேபாளம் ஆகிய வெளிநாடுகளிலும் இந்திய ரெயில்வேயால் நியமிக்கப்பட்ட டிக்கெட் ஏஜெண்டுகளிடம் கிடைக்கும்.

பல வகையான இந்ந்ரெயில் பாஸ்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை 360 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யலாம். இந்த நிலையில், இந்த்ரெயில் பாஸ்களை முன்பதிவு செய்தவற்கான கால அவகாசத்தை நீட்டித்து ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்ந்ரெயில் பாஸ்களை வெளிநாட்டினர் 365 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், இதற்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை.


Next Story