ஆவடி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
ஆவடி அருகே அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆவடி,
ஆவடியை அடுத்த சேக்காடு அண்ணாநகர் பகுதியில் அரசினர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்வதற்கு தலைமை ஆசிரியை வெற்றிச்செல்வி ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கட்டாய நன்கொடை பெறுவதாகவும், பீரோ, நாற்காலி போன்றவை கேட்டு வற்புறுத்துவதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை என்று கூறப்படுகிறது.
சாலை மறியல்
இவற்றை கண்டித்து நேற்று காலை பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி போலீசார் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் கருணாகரன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவர்கள் கூறியதாவது:-
கழிவறை வசதி இல்லை
பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, முறையான இருக்கை வசதிகள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. திறந்த வெளியில் அல்லது அருகில் உள்ள முட்புதர்களில் சிறுநீர் கழிக்க வேண்டியது உள்ளது.
இதனால் மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று வருகின்றனர். ஆசிரியர்கள் வகுப்பு நேரங்களில் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடவடிக்கை எடுப்பதாக உறுதி
மாணவர்களின் கோரிக்கைகளை கேட்ட திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் கருணாகரன், “விரைவில் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். நன்கொடை மூலம் பெற்ற பணத்தை திரும்ப அளிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக” உறுதி அளித்தார்.
அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு மாணவர்கள் வகுப்புக்கு சென்றனர்.
Related Tags :
Next Story