வங்கி மேலாளர் போல் பேசி பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் மோசடி


வங்கி மேலாளர் போல் பேசி பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 20 July 2017 4:35 AM IST (Updated: 20 July 2017 4:34 AM IST)
t-max-icont-min-icon

வங்கி மேலாளர் போல் பேசி பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.

திருக்கழுக்குன்றம்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் கானகோவில்பேட்டை கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 45). இவர் திருக்கழுக்குன்றத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் வங்கி கணக்கு வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் இவரது செல்போனுக்கு வங்கி மேலாளர் பேசுவதாக கூறி அறிமுகப்படுத்திக்கொண்டு உங்களுடைய ஏ.டி.எம் கார்டு காலாவதியாகிவிட்டது. அதனை புதுப்பிக்க வேண்டும். ஆதார்கார்டு இணைக்க வேண்டும் என்று தெரிவித்து ஏ.டி.எம் கார்டு எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை பெற்றுக்கொண்டு இணைப்பை துண்டித்தார்.

ரூ.1 லட்சத்து 14 ஆயிரம்

சிறிது நேரத்தில் விஜயலட்சுமியின் செல்போனுக்கு ரூ.80 ஆயிரம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி வந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். சற்று நேரத்தில் மேலும் ரூ.34 ஆயிரம் எடுக்கபட்டதற்கான மற்றொரு குறுஞ்செய்தி வந்தது.

இவ்வாறு மொத்தம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதென தெரியவந்தது.

இதையடுத்து வங்கி கணக்கு பராமரித்து வரும் வங்கிக்கு சென்று விசாரித்ததில் இவரது வங்கி கணக்கில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தில் வங்கி கணக்கு வைத்துள்ள மற்றொரு வங்கி கணக்குக்கு இந்த பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இது குறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story