களியக்காவிளை அருகே விபத்து கேரள அரசு பஸ் மோதி பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் பலி மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்


களியக்காவிளை அருகே விபத்து கேரள அரசு பஸ் மோதி பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் பலி மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 20 July 2017 5:40 AM IST (Updated: 20 July 2017 5:40 AM IST)
t-max-icont-min-icon

கேரள அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற, பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் பலி.

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே கேரள அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற, பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பிளஸ்-2 மாணவர்கள்

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மணலிவிளை மத்தம்பாலை பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீஜித் (வயது17), ஷைன்(17). இவர்கள் இருவரும் பளுகல் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தனர்.

நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கூடத்துக்கு வகுப்பு தொடங்கும் முன்பே வந்துவிட்டனர். இதனால் அவர்களது நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே சென்றனர்.

பஸ் மோதி சாவு

அவர்கள் மணலிவிளை பகுதியில் சென்றபோது, கேரள மாநிலம் வெள்ளறடையில் இருந்து கேரள அரசுபஸ் வந்தது. மாணவர்கள் அந்த பஸ்சை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட மாணவர்கள் இருவரும் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி ரத்தவெள்ளத்தில் கிடந்தார்கள். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதற்குள் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு மாணவர்களை மீட்க முயன்றனர். ஆனால் ஸ்ரீஜித், ஷைன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாணவர்களின் உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்து கிடந்த மாணவர்களின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கேரள அரசு பஸ் டிரைவரை கைது செய்யக்கோரி அவர்கள் கோஷமிட்டனர். அதற்குள் பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சோகம்

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், பளுகல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரை தேடி வருகிறார்கள்.

பள்ளிக்கு சென்ற மாணவர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story