வயலூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான 3 வீடுகளில் தீ விபத்து


வயலூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான 3 வீடுகளில் தீ விபத்து
x
தினத்தந்தி 20 July 2017 9:00 AM IST (Updated: 20 July 2017 8:20 AM IST)
t-max-icont-min-icon

வயலூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான 3 வீடுகளில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2 லட்சம், 25 பவுன் நகை எரிந்து நாசமானது.

சோமரசம்பேட்டை,

திருச்சியை அடுத்த வயலூரில் முருகன் கோவிலுக்கு சொந்தமான வீடுகள் குமாரவயலூர் வடக்கு தெருவில் உள்ளன. இந்த வீடுகள் கோவிலில் தெய்வ பணி புரிபவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இந்த வீடுகளில் உள்ளவர்கள் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கினர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருந்து சுப்பிரமணிய குருக்கள், கணேச அய்யர், லட்சுமி ஆகியோரின் வீடுகளுக்கு செல்லும் மின்சார வயர்கள் பலத்த காற்றினால் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீப்பற்றியது. பலத்த காற்று வீசியதால் 3 பேரின் வீடுகளுக்கும் தீ பரவியது.

அதிகாலை என்பதால் வீடுகள் தீப்பிடித்து எரிவது யாருக்கும் தெரியவில்லை. வீடுகளில் உள்ளவர்கள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். தீயினால் வீடுகளின் ஓடுகள் வெடித்து சிதறின. இந்த சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். அப்போது வீடு தீப்பிடித்து எரிவதை பார்த்து பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வீடுகளில் உள்ள பொருட்களை மீட்க முடியவில்லை.

இதுபற்றி திருச்சியில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர்.

இந்த தீ விபத்தில் சுப்பிரமணிய குருக்கள் வீட்டில் இருந்த மரத்திலான பொருட்கள், டி.வி., 25 பவுன் நகை, தனது கொள்ளு பேரன்களின் சுப நிகழ்ச்சி செலவிற்காக வாங்கி வைத்திருந்த ரூ.2 லட்சம், காசோலை, மோட்டார் சைக்கிள், பீரோக்களில் இருந்த ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் பாத்திரங்கள், மின்விசிறி, மிக்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலானது.

இதே போன்று கணேச அய்யரின் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த பட்டுப்புடவைகள், ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. லட்சுமி வீட்டின் கூரை மட்டும் சேதமடைந்தன. இதற்கிடையில் வீடுகளில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

3 பேரின் வீடுகளில் இருந்த 10 பேர் இந்த தீ விபத்தில் உயிர் தப்பி உள்ளனர். இதில் கல்யாணசுந்தரம் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அத்துடன் தடயவியல் நிபுணரும் ஆய்வு செய்தார்.
மேலும் ஸ்ரீரங்கம் தாசில்தார் சண்முகராஜசேகர், வருவாய் ஆய்வாளர் கலைவாணி உள்ளிட்ட வருவாய்த்துறையினர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் முல்லை ஆகியோரும் பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உடை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.

Next Story