பெங்களூருவில் ரூ.9.70 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட கன்டீரவா விளையாட்டு மைதானத்தை சித்தராமையா திறந்து வைத்தார்


பெங்களூருவில் ரூ.9.70 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட கன்டீரவா விளையாட்டு மைதானத்தை சித்தராமையா திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 21 July 2017 3:15 AM IST (Updated: 21 July 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ரூ.9.70 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட கன்டீரவா விளையாட்டு மைதானத்தை முதல்–மந்திரி சித்தராமையா திறந்து வைத்தார்.

பெங்களூரு,

பெங்களூருவில் ரூ.9.70 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட கன்டீரவா விளையாட்டு மைதானத்தை முதல்–மந்திரி சித்தராமையா திறந்து வைத்தார்.

கூடைப்பந்தை தூக்கி போட்டு...

பெங்களூருவில் கன்டீரவா விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானம் ரூ.9.7 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட இந்த கன்டீரவா விளையாட்டு மைதானத்தை, மூன்று முறை கூடைப்பந்தை தூக்கி கூடையில் போடுவதன் மூலம் திறந்து வைத்தார்.

இந்த மைதானத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரிகளிடம் இருந்து சித்தராமையா தகவல்களை கேட்டு பெற்றார். இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி பிரமோத் மத்வராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:–

சர்வதேச தரத்தில் மைதானம்

மொத்தம் ரூ.9.70 கோடி செலவில் இந்த கன்டீரவா விளையாட்டு மைதானம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் விளையாட்டுத்துறை ரூ.5 கோடியும், பெங்களூரு மாநகராட்சி ரூ.3½ கோடியும், பெங்களூரு வளர்ச்சி ஆணையம் ரூ.1.20 கோடியும் வழங்கியுள்ளன. சர்வதேச தரத்தில் இந்த மைதானம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், பெண் வீராங்கனைகள் தங்கும் அறைகள் மற்றும் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வருகிற 23–ந் தேதி முதல் ஆகஸ்டு 16–ந் தேதி வரை இங்கு சர்வதேச கூடைப்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வெளிவிளையாட்டு அரங்கமும் புதுப்பிக்கப்படும். நான் மந்திரியாக பதவி ஏற்றபோது இந்த மைதானத்தின் வருமானம் ரூ.1 கோடியாக இருந்தது. ஆனால் செலவு ரூ.2 கோடியாக இருந்தது. நான் பதவிக்கு வந்த பிறகு செலவை குறைத்து வருமானத்தை அதிகரித்து உள்ளேன்.

பராமரிப்பு செலவை...

வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு இல்லை. ஆனால் இந்த மைதானத்தின் பராமரிப்பு செலவை சுயசார்பாக மேற்கொள்ள நிதி வசதியை பெருக்கி கொள்ள வேண்டியது அவசியம். நிதி அதிகமாக இருந்தால் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகமாக மேற்கொள்ளலாம். அத்துடன் இன்னும் சில வசதிகளை ஏற்படுத்த முடியும்.

இங்கு 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அதில் 10 கேமராக்கள் திருட்டுப்போய் உள்ளன. இந்த மைதானத்தை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள் உரிய பாதுகாப்பு கொடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டனர். அவர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளை தொடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

மைதானத்தை வழங்க முடியவில்லை

கபடி போட்டிக்கு இந்த மைதானத்தை வழங்குமாறு கேட்டனர். ஆனால் இங்கு சர்வதேச கூடைப்பந்து போட்டிகள் நடைபெற உள்ளதால், இந்த மைதானத்தை வழங்க முடியவில்லை.

இவ்வாறு மந்திரி பிரமோத் மத்வராஜ் பேசினார்.


Next Story