விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பொருட்கள் திருட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை
முத்தூர் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பொருட்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
முத்தூர்,
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள சாந்தலிங்கபுரம் ராமையங்காட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51) விவசாயி. இவர் நேற்று காலை 9 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தனது மற்றும் சகோதரர் குடும்பத்தினருடன் கோவையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை பார்க்க காரில் புறப்பட்டு சென் றார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்ம ஆசாமிகள் ஒரு காரில் வந்து ராஜேந்திரன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து துணிமணிகளை கீழே வீசி நகை, பணம் ஏதும் உள்ளதா? என்று தேடிப்பார்த்தனர். ஆனால் பீரோவில் அதிகளவில் நகை, பணம் ஏதும் இல்லை. இதனால் மர்ம ஆசாமிகள் வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்றுவிட்டனர்.
ரூ.60 ஆயிரம்
பின்னர் மதியம் 12.30 மணிக்கு கியாஸ் சிலிண்டர் வழங்குவதற்கு ராஜேந்திரன் வீட்டிற்கு சிலிண்டர் வினியோகம் செய்பவர் வந்தார். அவர் ராஜேந்திரன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்ததை பார்த்தார். உடனடியாக செல்போனில் ராஜேந்திரனை தொடர்பு கொண்டு இது பற்றி தகவல் தெரிவித்தார்.
இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கோவையில் இருந்து திரும்பி வந்த ராஜேந்திரன் குடும்பத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த டி.வி., மடிக்கணினி, ஏர்கூலர், அரை பவுன் எடையிலான 3 கம்மல் மற்றும் ஏ.டி.எம்.கார்டு உள்பட சுமார் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டுப்போனதை அறிந்தனர். பின்னர் ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஹேமலதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார்கள்.
முத்தூர் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர திருட்டு சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story