தண்ணீர் என நினைத்து மதுவுடன் ஆசிட்டை கலந்து குடித்த கட்டிட தொழிலாளர்கள்
தாராபுரத்தில் தண்ணீர் என நினைத்து மதுவுடன் ஆசிட்டை கலந்து குடித்த கட்டிட தொழிலாளர்கள் 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காமராஜபுரத்தை சேர்ந்தவர் நாட்ராயன் (வயது 55). இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (50). இருவரும் கட்டிடத் தொழிலாளர்கள். இவர்கள் இருவருக்கும் மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை இருவரும் தாராபுரம் புறவழிச்சாலைக்கு சென்று, அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரிடம், மதுவை வாங்கி குடித்துள்ளனர். பிறகு மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறந்ததும் இருவரும் ஆளுக்கு ஒரு குவாட்டர் வாங்கினார்கள். பின்னர் சின்னக்கடை வீதிக்கு வந்து அங்கே தள்ளு வண்டியில் விற்பனை செய்த போண்டாவை வாங்கிக் கொண்டு அருகே இருந்த ஒரு சந்துக்குள் புகுந்து அமர்ந்து கொண்டனர்.
சுருண்டு விழுந்தார்
பின்னர் மதுவை குடிப்பதற்காக மதுபாட்டிலை வெளியே எடுத்து வைத்தபோதுதான், தண்ணீர் பாக்கெட் வாங்க மறந்தது அவர்கள் நினைவுக்கு வந்தது. தண்ணீருக்கு என்ன செய்வது என்று இருவரும் யோசித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் இருந்த சந்தில் ஒரு பிளாஸ்டிக் கேன் இருந்தது. அந்த கேனை பார்த்ததும் இருவருக்கும் அந்த கேனில் தண்ணீர்தான் இருக்கிறது என நினைத்து கேனை திறந்து, அதை மதுவில் ஊற்றி கலந்து குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வயிற்றில் லேசான எரிச்சல் ஏற்பட்டது.
அப்போது சரக்கு தரம் குறைவானதாக இருக்கும், எனவே சிறிது நேரத்தில் சரியாகி விடும் என்று நினைத்து அடுத்த ரவுண்டும் குடித்தனர். அப்போதுதான் அவர்களுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்கமுடியாமல் நாட்ராயன் சுருண்டு விழுந்தார்.
ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
மதுவில் எதையோ தெரியாமல் கலந்து குடித்துவிட்டோம் என சந்தேகம் அடைந்த தங்கவேல், தண்ணீர் ஊற்றிய பிளாஸ்டிக் கேனை எடுத்துவந்து அருகே இருந்தவர்களிடம் கொடுத்து, இந்த கேனில் இருப்பது என்ன? என்று கேட்டுள்ளார். அப்போது அந்த பிளாஸ்டிக் கேனை திறந்து முகர்ந்து பார்த்தவர்கள், கேனில் இருந்தது தண்ணீர் அல்ல என்றும் அது கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட் என்று கூறினார்கள்.
அதன் பிறகு நாட்ராயனுக்கும் தங்கவேலுவுக்கும் பயம் ஏற்பட்டு, ஆட்டோவில் ஏறி தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளனர். பிறகு அங்கிருந்த மருத்துவரிடம் நடந்ததை கூறி எங்களை காப்பாற்றுங்கள் என்று அழுதுள்ளனர். உடனடியாக இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு உயிருக்கு ஆபத்தான நிலையில் நாட்ராயனும், தங்கவேலுவும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story