தாராவியில் வீடு இடிந்து விழுந்து பெண் உள்பட 11 பேர் காயம்


தாராவியில் வீடு இடிந்து விழுந்து பெண் உள்பட 11 பேர் காயம்
x
தினத்தந்தி 21 July 2017 4:30 AM IST (Updated: 21 July 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

தாராவியில் வீடு இடிந்து விழுந்து பெண் உள்பட 11 பேர் காயமடைந்தனர்.

மும்பை,

தாராவியில் வீடு இடிந்து விழுந்து பெண் உள்பட 11 பேர் காயமடைந்தனர்.

வீடு இடிந்தது

மும்பை தாராவி 90 அடி சாலையில் டிரான்சிட் கேம்ப் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு 3 மாடி வீட்டில் ஜரிகை வேலை செய்யும் தொழில் நடந்து வந்தது. கீழ் தளத்தில் ஜரிகை தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். 2, 3–வது தளத்தில் ஜரிகை வேலைகள் நடந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று காலை 6 மணியளவில் திடீரென வீட்டின் மேல் 2 மாடிகள் இடிந்து விழுந்தன. சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பெண் உள்பட 11 பேர் காயம்

இந்தநிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த நசீம், பின்டு, சோட்டு, அமீத் மற்றும் ஒரு பெண் உள்பட 11 பேரை மீட்டு சிகிச்சைக்காக சயான் மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இடிபாடுகளில் மறைந்து கிடந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொருட்களையும் வெளியே எடுத்தனர்.

காயமடைந்தவர்களில் 7 பேர் இடிந்த வீட்டில் வசித்து வந்த ஜரிகை தொழிலாளர்கள் ஆவர். பெண் உள்பட மற்ற 4 பேரும் பக்கத்து வீடுகளில் வசித்து வருபவர்கள். சம்பவத்தின் போது வீட்டில் இருந்த பலர் தொழுகையில் ஈடுபட பள்ளி வாசலுக்கு சென்று இருந்தனர். அவர்களும் வீட்டில் இருந்திருந்தால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்கும்.

இந்த விபத்து குறித்து தாராவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் வீடு இடிந்த சம்பவத்தால் தாராவி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story