சாலையின் நடுவே வேன் கவிழ்ந்தது; 20 தொழிலாளர்கள் காயம்


சாலையின் நடுவே வேன் கவிழ்ந்தது; 20 தொழிலாளர்கள் காயம்
x
தினத்தந்தி 21 July 2017 4:30 AM IST (Updated: 21 July 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளியணை அருகே சாலையின் நடுவே வேன் கவிழ்ந்த விபத்தில் 20 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

வெள்ளியணை,

கடவூர் ஒன்றியம், வீரணம்பட்டி பகுதியில் இருந்து தனியாருக்கு சொந்தமான வேன் ஒன்று சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு காலையில் சென்று மாலையில் வருவது வழக்கம். அதன்படி நேற்று காலை 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பாளையம்- கரூர் சாலையில் கரூர் நோக்கி வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது வெள்ளியணையை அடுத்த பச்சப்பட்டி பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென பாளையம்- கரூர் சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்த தொழிலாளர்கள் அலறி துடித்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் வெள்ளியணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் வேனில் இருந்தவர்களை மீட்டனர். இதில் 20 பேர் காயமடைந்திருந்ததால் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் வீரணம்பட்டியை சேர்ந்த காளியம்மாள்(வயது 35), பரமேஸ்வரி(30), சங்கீதா(20), சரக்கம்பட்டியை சேர்ந்த ஜோதி(33), அய்யம்பாளையத்தை சேர்ந்த சீரங்கம்மாள்(30), மந்திரிகோன்பட்டியை சேர்ந்த முருகேசன்(31), எல்.புதூரை சேர்ந்த பிரியா(26), கரும்பாறைப்பட்டியை சேர்ந்த சிவகாமி(32), மந்திரிகோன்பட்டியை சேர்ந்த சாந்தி (35), ஆகியோர் கரூர் அரசு மருத்துவமனையிலும், வீரணம்பட்டி சிவகாமி(35), சங்கீதா(20), மந்திரிகோன்பட்டி முத்துகிருஷ்ணன்(19), மல்லிகா(29), ஈஸ்வரி(32), முருகேஸ்வரி(21), அம்மாபட்டி சவுந்தரராஜன்(49), பிச்சைமுத்து, தரகம்பட்டி சீதாபேபி(24), சங்காயி(43), பழனியம்மாள்(27) ஆகியோர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பாளையம்- கரூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Related Tags :
Next Story