தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ‘அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்துவோம்’


தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ‘அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்துவோம்’
x
தினத்தந்தி 21 July 2017 4:30 AM IST (Updated: 21 July 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்துவோம் என்று கோமா நிலைக்கு சென்ற மாணவியின் பெற்றோர், உறவினர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

சேலம்,

மகுடஞ்சாவடி அருகே அஞ்சக்காடு பகுதியில் என்.காட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நடுவனேரியை சேர்ந்த பெரியண்ணன்-மல்லிகா தம்பதியின் 7 வயது மகள் கண்மணி 2-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த மாதம் 27-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவியை, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் குடிநீர் தொட்டியை கழுவ சொன்னதாக கூறப்படுகிறது.

அதன்பேரில், குடிநீர் தொட்டியை கழுவிய மாணவி கண்மணி மயங்கி விழுந்தாள். பின்னர் பள்ளியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார். வீட்டில் சோர்வாக காணப்பட்டதால், பெற்றோர் விசாரித்தனர். கண்மணி நடந்த சம்பவத்தை தெரிவித்தார். பின்னர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மாணவி சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள்.

முழு உடல் பரிசோதனை செய்து பார்த்ததில், கண்மணிக்கு ரத்த புற்றுநோய் இருப்பது முதன் முதலில் கண்டறியப்பட்டது. டாக்டர்கள் கைவிரித்த நிலையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த கண்மணியை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாணவி கண்பார்வை இழந்து ‘கோமா‘ நிலைக்கு சென்று விட்டாள். இதனால், கண்மணியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை மாணவியின் பெற்றோர் பெரியண்ணன், மல்லிகா மற்றும் உறவினர்கள் திரண்டு வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், சேலம் கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில்,“எங்கள் குழந்தையை குடிநீர் தொட்டி கழுவ செய்த அப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து நீதி, நியாயத்தை பெற்று தந்திட வேண்டும்“ என கூறப்பட்டிருந்தது.

மேலும் பெற்றோர் தரப்பில் கூறுகையில்,‘எங்கள் குழந்தையை அநியாயமாக பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் குடிநீர் தொட்டியை கழுவ செய்ய சொன்னது தவறு. பள்ளி பராமரிப்புக்கு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படும் நிலையில், இதுபோன்று செய்ய சொன்ன அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரூ.5 லட்சம் இழப்பீடாக பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும். இல்லையெனில், பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்துவோம்“ என்றனர்.


Related Tags :
Next Story