குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
சிங்கம்புணரியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் உள்ள அண்ணாநகர் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்கக்கோரி அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் திண்டுக்கல் – காரைக்குடி சாலை வழியாக ஊர்வலமாக சென்று பேரூராட்சி அலுவலகம் முன்பு காலி குடங்களை வைத்து முற்றுகையிட்டனர்.
பின்னர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அண்ணா நகர் மேற்கு பகுதியில் சுமார் 50 குடும்பங்களுக்கு குடிநீர் குழய் இணைப்பு வழங்கவேண்டும். கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என்று கோஷமிட்டனர்.
அதன்பின் குடிநீர் பிரச்சினை குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி யிடம் முறையிட்டனர். அப்போது அவர், குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாநகர் பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.