ஊட்டி அருகே பூமிக்கடியில் இருந்து மீண்டும் புகை வருவதால் பரபரப்பு


ஊட்டி அருகே பூமிக்கடியில் இருந்து மீண்டும் புகை வருவதால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 July 2017 3:30 AM IST (Updated: 22 July 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே பூமிக்கடியில் இருந்து மீண்டும் புகை வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து அத்திக்கல் கிராமத்திற்கு செல்லும் வழியில் நீத்தி வனப்பகுதி உள்ளது. நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட இந்த வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கடியில் இருந்து திடீரென்று புகை வெளியே வந்தது. ஒரு சில நாட்களில் புகை வெளியே வருவது தானாகவே நின்று விட்டது.

இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் அதே இடத்தில் புகை வந்தது. அப்போது புகை வரும் இடங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி, பூமிக்கடியில் இருந்து வந்த புகை கட்டுப்படுத்தப்பட்டது. புவியியல் துறையினர் அங்குள்ள மண்ணை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த ஆய்வின் முடிவில் புகை வரும் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்பு கற்பூர மரங்களின் கிளைகள் புதைந்து இருந்திருக்கலாம். பூமியின் வெப்பத்தால் அந்த கற்பூர இலைகள் தீப்பற்றி எரிவதால், புகை வெளியே வருவது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் நீத்தி வனப்பகுதியில் பூமிக்கடியில் இருந்து மீண்டும் புகை வர தொடங்கி உள்ளது. இந்த புகையானது பெரும் வெப்பத்துடன் வெளியில் வருவதால், அப்பகுதியில் உள்ள புற்கள், மரக்கிளைகள், தைலமரங்களின் வேர்கள் கருகி கீழே விழ தொடங்கி உள்ளன. புகையும் ஒரு விதமான தூர்நாற்றத்துடன் வெளியேறுகிறது.

எனவே அந்த இடத்தில் ஆய்வு செய்து புகை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து வெளியே வர காரணம் என்ன? என்பது குறித்த உண்மை நிலையை கண்டறிய வேண்டும். குறிப்பிட்ட இடத்தின் அடியில் ஏதேனும் வாயுக்கள் வெளியேறுவதால் புகை வருகிறதா? என்பதை சோதனை செய்து அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி அருகே நீத்தி வனப்பகுதியில் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் புகை வெளியே வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் பூமிக்கடியில் இருந்து புகை வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story