குற்றாலம் அருவிகளில் பெண்கள் குளிக்கும் பகுதிகளில் கூடுதலாக பெண் போலீசாரை நியமிக்கவேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு


குற்றாலம் அருவிகளில் பெண்கள் குளிக்கும் பகுதிகளில் கூடுதலாக பெண் போலீசாரை நியமிக்கவேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு
x
தினத்தந்தி 22 July 2017 3:00 AM IST (Updated: 22 July 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் அருவிகளில் பெண்கள் குளிக்கும் பகுதிகளில் கூடுதலாக பெண் போலீசாரை நியமிக்கவேண்டும் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறினார். ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்திற்கு வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு சீசன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுப்பது மற்றும் 2017–

நெல்லை,

குற்றாலம் அருவிகளில் பெண்கள் குளிக்கும் பகுதிகளில் கூடுதலாக பெண் போலீசாரை நியமிக்கவேண்டும் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறினார்.

ஆலோசனைக் கூட்டம்

குற்றாலத்திற்கு வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு சீசன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுப்பது மற்றும் 2017–ம் ஆண்டுக்கான சாரல் திருவிழா நடத்துவது குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

குற்றாலம் சீசனை முன்னிட்டு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு அதிகளவில் ஆண்டுதோறும் வருவது வழக்கம். குற்றலாத்திற்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, போக்குவரத்தினை ஒழுங்கு செய்து, அருவிகளில் பொதுமக்களின் கூட்டத்தினை கட்டுப்படுத்தி, சமூக விரோத செயல் நடைபெறாமல் போலீசார் கண்காணிக்க வேண்டும். அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் நன்றாக செயல்படுகிறதா என்பதையும் கண்காணிக்கவேண்டும்.

பெண்கள் குளிக்கும் பகுதிகளில்

குற்றாலம் அருவிகளில் பெண்கள் குளிக்கும் பகுதிகளில் கூடுதலாக பெண் போலீசாரை நியமித்து குற்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் கண்காணிக்கவேண்டும். இதேபோல் பெண்கள் உடை மாற்றும் அறை பகுதிகளிலும் கூடுதலாக பெண் போலீசாரை நியமித்து பாதுகாப்பு ஏற்பாடு செய்திட வேண்டும். தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் இருந்திட வேண்டும். விபத்து மீட்பு பணிகளுக்கு 108 அவசர ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்திட வேண்டும். சிறப்பு மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அரசுப் போக்குவரத்து கழகம் பொதுமக்களின் வருகைக்கு தகுந்தவாறு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். காலாவதியான உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும். பெண்கள் உடை மாற்றும் பகுதியில் துப்புரவுப் பணி மற்றும் கட்டணம் வசூல் பணிகளில் சீருடை அணிந்த பெண்களை மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

கூடுதலாக துப்புரவு பணியாளர்கள்

மேலும், குப்பைகளை உடனுக்குடன் கூடுதல் துப்புரவு பணியாளர்களை கொண்டு துப்புரவு செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அருவி மற்றும் முக்கியமாக பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் கூடுதல் மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அருவி பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தமாக வைத்திடவும், சுற்றுலா பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அருவிகளில் குளிக்கும் பொழுது சோப்பு, ஷாம்பு, எண்ணெய் உபயோகிக்கக் கூடாது என்ற வாசகத்தினை அனைத்து அருவி பகுதிகளிலும் விளம்பரப் பலகைகளை வைத்திட வேண்டும். குற்றாலத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சாரல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடமும் வழக்கம்போல் சாரல் திருவிழா எட்டு நாட்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

கலை நிகழ்ச்சிகளை

சாரல் திருவிழாவில் கலை பண்பாட்டுத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், பயிற்சி உதவி கலெக்டர் இளம் பகவத், தென்காசி உதவி கலெக்டர் ராஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.ஜெகவீரபாண்டியன், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், நகரபஞ்சாயத்துகளின் உதவி செயற்பொறியாளர் ஜோதி சற்குணம், குற்றாலம் நகரபஞ்சாயத்து செயல் அலுவலர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story