திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு


திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
x
தினத்தந்தி 22 July 2017 4:00 AM IST (Updated: 22 July 2017 1:16 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த சின்னஈக்காடு புதிய சம்பத்நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 50). இவர் திருவள்ளூரில் தையல்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் குணசேகரன் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். அவர் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்று விட்டார். இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் தங்க நகை அதன் அருகே இருந்த ஒரு மடிக்கணினி திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து குணசேகரன் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கடைகளில் திருட்டு

திருவள்ளூரை சேர்ந்தவர் பெருமாள் (54). இவர் அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருமாள் கடையில் இருந்த பொருட்களை சரி பார்த்தபோது அங்கு இருந்த 6 செல்போன்கள் மற்றும் ரூ.3 ஆயிரத்து 500 திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் ஆயில்மில் அருகே வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் அதன் மேலாளர் சாந்தகுமார், கடையில் உள்ள பொருட்களின் இருப்பை சரிபார்த்தார். அப்போது அங்கு இருந்த 2 ஏ.சி.க்கள், ஒரு மின்விசிறி திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து சாந்தகுமார் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story