பெங்களூரு சிறையில் முறைகேடுகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை கூடுதல் டி.ஜி.பி. மேகரிக் எச்சரிக்கை
‘‘பெங்களூரு சிறையில் முறைகேடுகளுக்கு துணைபோகும் சிறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மேகரிக் எச்சரித்துள்ளார்.
பெங்களூரு,
‘‘பெங்களூரு சிறையில் முறைகேடுகளுக்கு துணைபோகும் சிறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மேகரிக் எச்சரித்துள்ளார்.
சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள்பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் கைதிகள் போதை பொருட்கள் பயன்படுத்துவதாகவும், சசிகலா உள்ளிட்ட சில கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி, 2 அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளார். மேலும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகவும் ரூபா கூறினார். அந்த குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் வகையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதற்கான வீடியோ காட்சிகள் வெளியானது.
இதையடுத்து, சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ், அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன், சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறை அதிகாரிகளுக்கு உத்தரவுதற்போது கர்நாடக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக மேகரிக் நியமிக்கப்பட்டு உள்ளார். சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக ரேவண்ணா உள்ளார். அதே நேரத்தில் பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளும் கூண்டோடு மாற்றப்பட்டார்கள். தற்போது பரப்பனஅக்ரஹாரா சிறை தலைமை சூப்பிரண்டாக சோமசேகரும், சூப்பிரண்டாக ரமேசும் உள்ளனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் கூடுதல் டி.ஜி.பி. மேகரிக் சிறையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் சிறையில் நடக்கும் முறைகேடுகள் தடுக்கப்படும் என்றும், பரப்பனஅக்ரஹாரா சிறை முன்மாதிரி சிறையாக மாற்றப்படும் என்றும் கூறினார்.
அதே நேரத்தில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை கூடுதல் டி.ஜி.பி. மேகரிக் எடுத்து வருகிறார். கைதிகளை பார்வையாளர்கள் பார்க்கவும், அவர்கள் கொண்டு வரும் பொருட்களை கைதிகளுக்கு கொடுக்கவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் சிறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதால், அதனை தடுக்கும் வகையில் சிறை அதிகாரிகளுக்கும் கூடுதல் டி.ஜி.பி. மேகரிக் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:–
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்பெங்களூரு சிறையில் உள்ள ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். எந்த ஆவணங்களும் காணாமல் போனதாக சொல்லும் பேச்சுக்கே இடமில்லை. குறிப்பாக சிறையில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் செயல்பட வேண்டும். ஏதாவது கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருந்தால், அதுபற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் ‘ஆப்‘ செய்யப்பட்டால், அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறை விதிமுறைகளை அறிந்து கொண்டு, அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். அதனை கைதிகள் கடைப்பிடிக்கிறார்களா? என்று கண்காணிக்க வேண்டியதும் அவசியம். கைதிகளாக சிறைக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு கோர்ட்டு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிட்டுள்ளதோ, அதனை மட்டுமே வழங்க வேண்டும். அதுதவிர வேறுஎந்தவிதமான சிறப்பு வசதிகளும் செய்து கொடுக்கக்கூடாது. சிறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு சிறை அதிகாரிகளே முழு பொறுப்பு. அவ்வாறு முறைகேடு நடந்தாலோ, அதுபற்றி எனது கவனத்திற்கு வந்தாலோ, சிறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.’’
இவ்வாறு கூடுதல் டி.ஜி.பி. மேகரிக் உத்தரவுகளை பிறப்பித்து எச்சரித்துள்ளார்.