தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்
தஞ்சை அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 57 வீடுகள் எரிந்து நாசமானது. தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் திருமண மண்டபத்திலும், பெரியவாசல் திருமண மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார். பின்னர் அவர், மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது அவர்கள், வீடுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார். தமிழகஅரசின் நிவாரண உதவியாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 ஆயிரம், 5 கிலோ அரிசி, மண்எண்ணெய், வேட்டி, சேலை ஆகியவற்றையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரைப்படி அ.தி.மு.க.(அம்மா) சார்பில் ரூ.5 ஆயிரமும் என மொத்தம் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
வீடு
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை உணவு செலவு முழுவதையும் தாமே ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் கூறினார். அமைச்சருடன் கலெக்டர் அண்ணாதுரை, ரெங்கசாமி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., ராம்குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கோபிநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் மோகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் முத்து, ராஜகோபால், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நாசர், துரை புர்கானுதீன் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக அமைச்சர் துரைக்கண்ணு நிருபர்களிடம் கூறும்போது, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. சொந்த இடம் வைத்து இருப்பவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டின்படி வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தற்போது தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் அரசின் சார்பில் வீடு கட்டி கொடுக்க முடியாது. அவர்கள் வேறு இடத்திற்கு செல்வதாக இருந்தால் வருவாய்த்துறையின் மூலம் மாற்று இடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் ராணி தெரிவித்தார்.
Related Tags :
Next Story