மருத்துவமனையை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 25 பேர் கைது


மருத்துவமனையை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 25 பேர் கைது
x
தினத்தந்தி 22 July 2017 4:30 AM IST (Updated: 22 July 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் மருத்துவமனையை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடையைமீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் 129 ஏக்கர் பரப்பளவில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ரூ.231 கோடியே 23 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ளது. இந்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தற்போது புதுக்கோட்டையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை புதிதாக திறக்கப்பட்டு உள்ள மருத்துவ கல்லூரிக்கு மாற்றம் செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாவட்ட தலைமை மருத்துவமனையை புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தொடர்ந்து பழைய இடத்திலேயே இயங்க தமிழக அரசும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று நாம்தமிழர் கட்சியின் சார்பில் தடையைமீறி புதுக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் கணேஷ், அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட புதுக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் தடையைமீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம்தமிழர் கட்சியை சேர்ந்த 25 பேரை கைது செய்து புதுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story