மாநில தலைமைக்கு எதிராக பாரதீய ஜனதா அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் உண்ணாவிரதம்
மாநில தலைமைக்கு எதிராக பாரதீய ஜனதா அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
புதுச்சேரி,
பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் புதுவை சட்டமன்றத்துக்கு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டமும் நடந்தது.
இந்தநிலையில் பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் ஜான்சி நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அப்போது தற்போதைய நிர்வாகிகளின் செயல்பாட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
திடீர் உண்ணாவிரதம்
கடந்த காலங்களில் கட்சியின் வளர்ச்சிக்கு தீவிரமாக உழைத்தவர்களுக்கு ஏன் நியமன எம்.எல்.ஏ. பதவி வழங்கவில்லை? இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் முன்கூட்டியே ஆலோசிக்காதது ஏன்? என்று மூத்த நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக அவர்களுக்கும் தற்போதைய நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தாமோதர், செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் நேற்று காலை கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள ஹாலில் அமர்ந்து திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கை அட்டை
அவர்கள் தங்கள் கைகளில் கோரிக்கை அட்டையையும் வைத்திருந்தனர். அதில், மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ.வின் நடவடிக்கை குறித்தும் அவரை கண்டிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கட்சி அலுவலகத்துக்கு வந்தார். நேராக தனது அறைக்கு சென்று அமர்ந்த அவர் பணிகளை கவனித்தார். நிர்வாகிகளின் உண்ணாவிரதம் குறித்து அறிந்ததும் பத்திரிகையாளர்களும், போலீசாரும் அங்கு விரைந்தனர். இதைத்தொடர்ந்து கட்சி அலுவலக கதவுகள் இழுத்து மூடப்பட்டன. யாரையும் பாரதீய ஜனதா கட்சியினர் உள்ளே அனுமதிக்கவில்லை.
மேலிடத்துக்கு தகவல்
பின்னர் சிறிதுநேரத்தில் பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றுவிட்டார். அதன்பின் கட்சி அலுவலகத்துக்குள் சென்ற பத்திரிகையாளர்களிடம் உண்ணாவிரதம் இருந்தவர்கள் எதுவும் பேசவில்லை. மாலையில் மூத்த நிர்வாகிகள் இருவரும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு சென்றனர். மூத்த நிர்வாகிகள் இருவர் கட்சி அலுவலகத்துக்குள் உண்ணாவிரதம் இருந்த தகவல் கட்சியின் மேலிட நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாரதீய ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story