புதன் கிரக புதிர்களை அவிழ்க்க முயலும் விண்கலங்கள்


புதன் கிரக புதிர்களை அவிழ்க்க முயலும் விண்கலங்கள்
x
தினத்தந்தி 22 July 2017 9:00 PM IST (Updated: 22 July 2017 1:12 PM IST)
t-max-icont-min-icon

புதன் கிரகத்தின் புதிர்களை அவிழ்ப்பதற்கு அதற்கு விண்கலத்தை அனுப்ப விஞ்ஞானிகள் முடிவெடுத்திருக்கின்றனர்.

இருபது ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட இந்த விண் பயணத்தை பூர்த்தி செய்ய ஏழு ஆண்டுகள் பயணித்தாக வேண்டும். புதன் கிரகத்துக்கான இரு விண் கலங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அடுத்த ஆண்டு புறப்படும் என்று ஐரோப்பிய, ஜப்பானிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இரு விண்கலங்களும் ஒன்றாக எட்டு கோடி கிலோமீட்டர் தூரம் பயணிக்கும்.

ஆனால், 400 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலையில் அவை தனித்தனியே இறங்கி சோதனை செய்யும். நம் சூரிய மண்டலத்தின் மிகச்சிறிய கிரகம் புதன். சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகமும் இதுதான்.

பழமையான எரிமலைகள், நெடிதுயர்ந்த பாறைகள், ஆழமான பெரும்பள்ளங்கள் அடங்கிய மேற்பரப்பைக்கொண்டிருக்கும் புதன் கிரகத்தில் மிகக்குறைந்த ஆய்வுகளே இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போதைய மிகப்பெரிய புதிய ஆய்வு அதை மாற்றியமைக்கப் போகிறது.
புகழ்பெற்ற இத்தாலிய விஞ்ஞானியான பெபி கொலம்போவின் பெயரிடப்பட்டுள்ள விண்கலம் இது. இதை உருவாக்க பத்தாண்டு காலம் பிடித்திருக்கிறது. பிரம்மாண்டமான இந்த விண்கலம், அதிதீவிர சூழலைத் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதன்கிரகத்தை அடைவதற்கு இது சூரியனை நோக்கிப் பயணிக்க வேண்டும். அதாவது, கடுமையான கதிர்வீச்சு மற்றும் வெப்பத்தை எதிர்கொள்ளவேண்டும். புதன்கிரகத்தின் மேற்பரப்பில் வெப்பம் 450 டிகிரி செல்சியஸ் வரை எட்டலாம். ஈயத்தையே உருகச் செய்யும் வெப்பம் அது. அடுத்த ஆண்டு இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படும்.

“புதனைச் சென்றடைவது ஒரு நீண்ட பயணம். சூரியனை நெருங்கும்போது அதன் வெப்பத்தைச் சமாளிக்க வேண்டும். நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் குறித்த மேலதிக தகவல்களை நமக்கு வழங்கப்போகும் ஒரு புதிரான சிறிய உலகம்தான், புதன் கிரகம்” என்கிறார், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த மார்க் மெக்கொக்ரியன்.

பெபி கொலம்போவின் பயணத்துக்கு ஏழு ஆண்டுகள் பிடிக்கும். அதாவது, வருகிற 2025-ல்தான் அது புதன்கிரகத்தைச் சென்றடையும்.

அங்கு சென்றவுடன் அதன் என்ஜின் விலகி, இரண்டு விண்கலங்கள் தனியாகப் பிரியும். இரண்டும் இணைந்து அரிய காட்சிகளை அனுப்பும்.

அதன் மூலம், புதன்கிரகத்தின் தோற்றங்களை தெள்ளத்தெளி வாகப் பார்க்க முடியும். புதன்கிரகத்தின் மையத்தில் என்ன இருக் கிறது என்ற மர்மத்தைத் தீர்க்க இது உதவும்.

இந்தத் திட்டத்துக்காக எக்ஸ் ரே காமிராக்களை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

“புதனிலிருந்து வரும் தகவல்களை இந்தப் பூமியில் பார்க்கப்போகும் முதல் மனிதர்கள் நாங்கள்தான்” என்கிறார், இந்தத் திட்டத்தில் பணிபுரியும் விஞ்ஞானி எம்மா பன்ஸ்.

“புதனிலிருந்து வரும் எக்ஸ் ரே படங் கள், அக்கிரகத்தின் மேற்பரப்பில் என்ன இருக் கிறது என்பதை காண்பிக்கப்போகிறது. நமது இதுநாள் வரையிலான புரிதலை அது மாற்றியமைக்கப்போகிறது” என்கிறார், எம்மா.
மிக விரைவில் இந்த விண்கலம் தன் நீண்டநெடிய பயணத்துக்குத் தயாராகிவிடும். நமக்கு முதல்கட்ட தகவல்கள் கிடைக்க சிறிது காலம் பிடிக்கும். இதுவரை கண்டிராத காட்சிகளுக்கு நாம் காத்திருக்கத்தான் வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
காத்திருப்போம்!

Next Story