ரூ.1,516 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்திக்கடவு–அவினாசி திட்டம் 30 மாதத்தில் நிறைவேற்றப்படும்


ரூ.1,516 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்திக்கடவு–அவினாசி திட்டம் 30 மாதத்தில் நிறைவேற்றப்படும்
x
தினத்தந்தி 23 July 2017 4:30 AM IST (Updated: 23 July 2017 12:43 AM IST)
t-max-icont-min-icon

அத்திக்கடவு–அவினாசி திட்டத்திற்கு ரூ.1,516 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 30 மாதத்தில் இந்த அரசே திறப்பு விழாவும் நடத்தும் என்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருப்பூர்,

முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரையாம்புதூரில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கி பேசினார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்து பேசினார். முன்னதாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசினார்.

விழாவில் எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைத்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

திருப்பூர் மாவட்ட விவசாய மக்கள் பயன்பெற வேண்டும், வாழ்வில் வளம்பெற வேண்டும் என்பதற்காக மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை அறிவித்தார். இந்த ஆண்டு ரூ.250 கோடியை அரசு ஒதுக்கீடு செய்து இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலமாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தில் 1.5 டி.எம்.சி. தண்ணீர் தேவை. இந்த திட்டத்துக்காக 70 நாட்கள் 850 கன அடி தண்ணீர் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 9 தாலுக்காக்களில் உள்ள 30 பொதுப்பணித்துறை ஏரிகள், 41 ஒன்றிய ஏரிகள், 609 குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த திட்டம் 2 திட்டங்களாக வகுக்கப்பட்டன. எந்த திட்டம் எளிது என்பதை ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளது. அதில் பவானி அருகில் உள்ள காளிங்கராயன் பகுதியில் இருந்து தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்பதை இந்தநேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த திட்டத்துக்காக 1,516 கோடி ரூபாயை அரசு ஒதுக்க இருக்கிறது. இந்த திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம். இதற்கு முந்தைய திட்டத்துக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி பெற வேண்டும். வனப்பகுதி வழியாக திட்டத்தை கொண்டு வர வேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்ற 7 அல்லது 8 ஆண்டுகள் வரை பிடிக்கும். ஆனால் தற்போதைய திட்டம் 30 மாதங்களில் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். வருகிற டிசம்பர் மாதத்துக்குள் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும். ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போதே இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த ஆட்சியிலேயே திறப்பு விழா செய்து மக்கள் பயன்பெறுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

கோவை, திருப்பூர் பகுதியில் தென்னை மரங்கள் அதிகம் உள்ளது. எனவே, இந்த பகுதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும், விவசாயிகளும் நீரா பானத்தை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அதன்படி நீரா பானம் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இந்த நீரா பானத்தை எடுப்பதன் மூலமாக ஒரு தென்னை மரத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கிடைக்கும். இந்த அரசு விவசாயிகளின் அரசு. விவசாயிகள் என்ன நினைக்கிறார்களா, அதை செயல்படுத்தும் அரசு. தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் வண்டல் மண் அள்ளுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. முதல்கட்டமாக ரூ.100 கோடி கொடுத்தோம். 1,509 ஏரிகள் தூர்வாருவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரத்தில் இந்த திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள். வரும் ஆண்டில் 2,065 ஏரிகள் ரூ.300 கோடியில் தூர்வார அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் ஏரி, குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு நீர் சேமிக்கப்படுகிறது. வண்டல் மண் இயற்கை உரமாக விவசாயிகளுக்கு கிடைக்கிறது. விளைச்சல் அதிகமாக கிடைக்க இதை அரசு செயல்படுத்தி வருகிறது.

சாலைவசதி, பாலங்கள், கல்லூரிகள் என எண்ணற்ற திட்டங்களை மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு செயல்படுத்தி வருகிறது. கடுமையான வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. 38 சதவீதம் மழை மட்டுமே நமக்கு கிடைத்தது. அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்து தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொண்ட அரசு ஜெயலலிதா அரசு.

சட்டசபையில் 110 விதி என்ற அற்புதமான விதியை மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். எண்ணற்ற திட்டங்களை அவர் அறிவித்தார். சட்டசபை நடக்கும் போதெல்லாம் மக்கள் என்ன திட்டங்கள் நம் தொகுதிக்கு கிடைக்கப்போகிறது என்று எதிர்பார்த்தார்கள். நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றினார். ஜெயலலிதா வழியில் வந்த இந்த அரசும், அறிவித்த அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு செயல்படுத்தும் என்பதை உறுதியுடன் கூறுகிறேன்.

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும். உயிர் தண்ணீர் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதை அரசு கனிவோடு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

காவிரி நதிநீரை ஜெயலலிதா பெற்றுத்தந்தார். காவிரி நதிநீரை குடிநீருக்கும், பாசனத்துக்கும் பயன்படுத்தி வருகிறோம். உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வழக்கு நடந்து வருகிறது. ஜெயலலிதாவின் ஆசியால் இந்த வழக்கில் வெற்றி பெற்று நமக்கு நீதி கிடைக்கும். நான் இங்கு முதல்–அமைச்சர் இல்லை. உங்களில் ஒருவனாக இருக்கிறேன். மறைந்தாலும் ஜெயலலிதாதான் இன்றைக்கும் முதல்–அமைச்சர். நீங்கள் அனைவரும் இங்கு முதல்–அமைச்சர்கள் தான். இந்த ஆட்சிக்கு நீங்கள் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும். ஒரு தலைவர் மறைந்து விட்டால் கட்சி அழிந்து விடும், ஆட்சி கலைந்து விடும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி கனவு கண்டவர்களுக்கு சாவு மணி நீங்கள் அடிக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கட்சியை உருவாக்கினார். அதன்வழி வந்த மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும் அப்படியே செயல்படுத்தினார். இருபெரும் தலைவர்கள் வழிகாட்டியதை போல் இந்த அரசு ஏழை, எளிய மக்களுக்கான அரசாக செயல்படும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.


Next Story