ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. விலகியதில் யாருடைய நிர்பந்தமும் இல்லை: தம்பிதுரை பேட்டி
ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. விலகியதில் யாருடைய நிர்பந்தமும் இல்லை என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
கோவை,
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியையும், எம்.ஜி.ஆர். பெற்று தந்த இரட்டை இலை சின்னத்தையும் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.
ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா) அணியில் இருந்து விலகி இங்கு (அ.தி.மு.க. அம்மா அணி) வருவது, இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதைத்தான் காட்டுகிறது. மேலும் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகியதில் யாருடைய நிர்பந்தமும் இல்லை.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த நேரத்தில் இரட்டை இலை சின்னத்தை மீட்கவும், ஆட்சியை காப்பாற்றவும் வேண்டியது அனைவரின் கடமையாகும்.
அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தில் மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்ட பிரச்சினையில் பாராளுமன்றம் முன்பு ஓ.பன்னீர்செல்வம் அணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியது தேவையற்றது. அ.தி.மு.க.வில் பிளவு என்பதே கிடையாது. ஆர்.கே.நகர் தேர்தலையொட்டிதான் தேர்தல் கமிஷன் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.
124 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் அணியில் உள்ளனர். 10 எம்.எல்.ஏ.க்கள் தான் அங்கு உள்ளனர். எனவே இதனை கட்சி, இரு பிரிவு என்று தேர்தல் கமிஷன் கருதக்கூடாது. இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகம் தற்போது வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. இதுகுறித்து சிலர் தவறான கருத்துகளை பரப்பி வருகிறார்கள். தமிழகம் முன்மாதிரி மாநிலமாக உள்ளது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
நடிகர் கமல்ஹாசன், ஊழல் புகார் குறித்து பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. ஊழல் புகார் என்பது நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்று. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். கருத்துகளை கூறலாம். சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்ட விவகாரம் குறித்து கர்நாடக அரசு விசாரணை குழு அமைத்துள்ளது. விசாரணைக்கு பின்னரே உண்மை வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.