திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் 2 பேருக்கு கத்திக்குத்து
திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 43). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான பாபு(38) என்பவருடன் நடைபயிற்சிக்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் திடீரென தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு ஆறுமுகத்தையும் பாபுவையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து ஆறுமுகம் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்குப்பதிவு செய்து நடைபயிற்சி சென்றவர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற 4 பேரை தேடி வருகிறார்.
மற்றொரு சம்பவத்தில் அடி–உதை
திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (20). இவர் செங்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் புல்லரம்பாக்கம் கிராமத்தில் சாவுக்கு மேளம் அடித்து விட்டு அதற்கான பணத்தை பிரிப்பதில் அதே ஊரை சேர்ந்தவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த அஜித்குமார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சூர்யா, கிள்ளிவளவன், வர்கீஸ், தேவகுமார் ஆகியோரும் அஜித்குமாரை தகாத வார்த்தையால் பேசி கையாலும் இரும்பு கம்பியாலும் தாக்கி உள்ளனர்.
இதில் காயம் அடைந்த அஜித்குமார் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அஜித்குமார் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சூர்யா, கிள்ளிவளவன், வர்கீஸ், தேவகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story