ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை நிறுத்தியதால் போர்வெல் லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்


ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை நிறுத்தியதால் போர்வெல் லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 23 July 2017 3:30 AM IST (Updated: 23 July 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை நிறுத்தியதால் போர்வெல் லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

வடமதுரை,

வடமதுரை அருகே உள்ள புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கரிவாடன் செட்டிபட்டி கிராமத்தில் வசிக்கிற பொதுமக்களுக்கு, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் ஆழ்துளை கிணற்றில் தண்ணீரில் வற்றியதால், கடந்த 6 மாதங்களாக அப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலவலகத்தில் புகார் செய்தனர். இதையடுத்து புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று 2 போர்வெல் லாரிகள் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்தது. 950 அடி ஆழம் வரை போர் போட்டும், தண்ணீர் கிடைக்கவில்லை.

இனிமேல் தண்ணீர் வர வாய்ப்பில்லை என்று கருதிய போல்வெல் அமைக்கும் தொழிலாளர்கள் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை நிறுத்தினர். மேலும் ஆழ்துளை கிணறு அமைப்பதை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் போர்வெல் லாரிகளை சிறைபிடித்து பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடமதுரை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளைச்சாமி, ஊராட்சி செயலர் கருப்பையா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டறிந்து ஒரு வாரத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பதாகவும், அதுவரை தினமும் 2 முறை டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யவதாகவும் உறுதி அளித்தனர். இதனால் சமாதானமடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story