குண்டு துளைக்காத சட்டை


குண்டு துளைக்காத சட்டை
x
தினத்தந்தி 23 July 2017 11:30 AM IST (Updated: 23 July 2017 11:10 AM IST)
t-max-icont-min-icon

ஒரு நாட்டின் எல்லைக்குள் அன்னிய நாடுகள் ஊடுருவாமல் தடுப்பதற்கும், திடீர் தாக்குதலில் ஈடுபடும் போது, அவர்களை எதிர்த்து தாக்குவதற்கும், தற்காத்துக் கொள்வதற்கும் ஒவ்வொரு நாட்டிலும் ராணுவம் அமைக்கப்பட்டுள்ளது.

ரு நாட்டின் எல்லைக்குள் அன்னிய நாடுகள் ஊடுருவாமல் தடுப்பதற்கும், திடீர் தாக்குதலில் ஈடுபடும் போது, அவர்களை எதிர்த்து தாக்குவதற்கும், தற்காத்துக் கொள்வதற்கும் ஒவ்வொரு நாட்டிலும் ராணுவம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ராணுவ வீரர்கள் எதிரிகளுடன் போர்க்களத்தில் நிற்கும் போது அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அவசியமாகும். துப்பாக்கி, தோட்டாக்கள், வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட பொருள்களுடன் போர்க்கவசம் என்பது முக்கியமானதாகும். அத்துடன், ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் துளைக்காத சட்டை (புல்லட் புரூப் ஜாக்கெட்) வழங்கப்படுகிறது.

தற்போது இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் கவச ஆடை அமெரிக்காவில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் எடையும் மிக அதிகம். இதனால் இந்திய வீரர்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். ஆனால், இந்த கவச ஆடையை விட தரம் உயர்ந்ததாகவும், எடை குறைவாகவும், குறைந்தவிலையிலும் கவச உடையை சந்தானு பவ்மிக் என்ற பேராசிரியர் கண்டுபிடித்துள்ளார். இவர் கோவையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் துறைத்தலைவராக பணியாற்றி வருகிறார்.

இந்த பாதுகாப்பு கவச உடை, தரம்வாய்ந்ததாகவும், மிகவும் எடை குறைந்த தெர்மோ பிளாஸ்டிக் தொழில்நுட்பத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 20 அடுக்குகள் உள்ளன. ஒவ்வொரு அடுக்குக்கும் இடையே கார்பன் பைபர் அடைக்கப்பட்டுள்ளது. இந்த கவச ஆடை 57 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை தாங்கும் சக்தி கொண்டது. விலையை பொறுத்தமட்டில் அமெரிக்காவில் இருந்து கொள்முதல் செய்யப்படும் விலையில் 3-ல் ஒரு பங்கு தான்.

தற்போது நமது நாடு ஒரு கவச ஆடைக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவழிக்கிறது. ஆனால் நம்மூரில் தயாரிக்கப்படும் புதிய கவச ஆடை ரூ.50 ஆயிரம் மட்டும் தான். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வரை ராணுவம் சேமிக்க முடியும் என்று கருதப்படுகிறது. ராணுவவீரர்கள், துணை ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் கவச ஆடை 15 முதல் 18 கிலோ எடை கொண்டது. சந்தானுவின் புதிய கவச உடை வெறும் 1½ கிலோ எடை மட்டுமே. சந்தானுவின் இந்த கண்டுபிடிப்பை இந்திய அரசு, பாரதப்பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரதமரின் ஒப்புதலுக்கு பின்னர், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் மூலம் குண்டு துளைக்காத சட்டை தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 70 வருடங்களுக்கு பிறகு சொந்த நாட்டிலேயே தயாராகும் குண்டுதுளைக்காத சட்டை இது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story