25. மோப்பக் கிடைக்கும் துப்பு


25. மோப்பக் கிடைக்கும் துப்பு
x
தினத்தந்தி 23 July 2017 7:15 PM IST (Updated: 23 July 2017 3:21 PM IST)
t-max-icont-min-icon

மனிதனால் வளர்ப்பு மிருகமாக ஆக்கப்பட்ட முதல் விலங்கு நாய். வாலாட்டுவதை அவனிடமிருந்து சரியாகக் கற்றதும் அதுவே.பல இடங்களில் தலை இருக்க வால் ஆடுவதைப் பார்க்கலாம்.

னிதனால் வளர்ப்பு மிருகமாக ஆக்கப்பட்ட முதல் விலங்கு நாய்.

வாலாட்டுவதை அவனிடமிருந்து சரியாகக் கற்றதும் அதுவே.

பல இடங்களில் தலை இருக்க வால் ஆடுவதைப் பார்க்கலாம்.

நாய்க்கு முதலில் பெயரை வைத்துவிட்டு மற்ற பெரிய விலங்கினங்களான சிங்கத்திற்கும், ஓநாய்க்கும் ‘பெரிய நாய்’ என்றும் நரிகளுக்குச் ‘சின்ன நாய்’ என்றும் பல மொழிகளில் பேரிட்டதாக மொழியியல் வல்லுநர் நிக்கலாய் மார் குறிப்பிடுகிறார்.

‘எட்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவை பழக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்று தொல்லியல் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வழிதவறிச் சென்ற ஓநாய்க் குட்டி மனிதக் குடியிருப்புகளில் மாட்டிக்கொண்டு வளர்க்கப்பட்டிருக்க வேண்டும்; நல்ல மோப்பத் திறன் கொண்ட விலங்கு அருகிலிருப்பதன் அனுகூலங்களை அனுசரித்து அதன்மேல் விருப்பம் கொண்டு ஆதிமனிதன் வளர்த்திருக்க வேண்டும், என யூரி டெமட்ரியோவ் குறிப்பிடுகிறார்.

வன்மம் கொண்டவர்களை உருவாக்குவதற்கு நாஜிகள் நாயைப் பயன்படுத்தினர். இளைஞர்களிடம் குட்டியைக் கொடுத்து வளர்க்கச் சொல்வார்கள். அவை வளர்ந்து பெரிதாகி பிரிய முடியாத அளவிற்கு அந்த இளைஞனோடு நெருக்கமானதும், பொது இடத்தில் துப்பாக்கியைக் கொடுத்து அவனை அந்நாயைச் சுடச் சொல்வார்கள். முகம் சுளிக்காமல் சுடுபவர்கள் சித்திரவதை முகாம்களுக்கு அதிகாரியாக நியமிக்கப்படுவார்கள்.

நாய்களுக்கான முதல் நினைவாலயம் கி.மு. நான்காம் நூற்றாண்டில் கொரிந்த் நகரில் கட்டப்பட்டது. சோத்தர் என்கிற நாய், எதிரி ஊருக்குள் நுழைகிறபோது குரைத்து உசுப்பிவிட்டதாம். பகைவர்கள் விரட்டியடிக்கப்பட்டதும் அதன் கழுத்தில் வெள்ளிப்பட்டை மாட்டப்பட்டு நினைவுச் சின்னம் கட்டப்பட்டது. பாரீஸ் நகரத்தில் செயிண்ட் பர்னார்ட் என்கிற நாய் பனிக்குழிகளுக்குள் மாட்டிக்கொண்ட 40 பேரைக் காப்பாற்றியதற்காக நினைவுச் சின்னம் ஒன்று உள்ளது.

விசுவாசத்திற்கும் நாய்களே நற்சான்று. ஜப்பானில் சிபுயா என்கிற இடத்தில் நாய்க்கு ஒரு நினைவுச் சின்னம். ஹட்சிகோ என்கிற நாய் அதன் மாஸ்டரை வழியனுப்ப தினமும் தொடர்வண்டி நிலையம் வரும். பிறகு மாலையிலும் வந்து அவருடன் வீடுவரை செல்லும். எஜமானர் காய்ச்சலில் விழுந்து இறந்துவிட்டார். அந்நாயோ அதை ஏற்கத் தயாராக இல்லை. பத்து ஆண்டுகள் தொடர்ந்து காலையிலும், மாலையிலும் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துவிடும். எல்லா ரெயில்களும் போகும்வரை காத்திருக்கும். ஒரு நாள் விபத்தில் இறந்து போனது. அந்த நாயைப்பற்றிய குறிப்பு செய்தித்தாள்களில் வந்தது. மக்கள் பணம் வசூலித்து அதற்கு ஞாபகச் சின்னம் அமைத்தனர்.

நாய்கள் உடைமைகளைப் பாதுகாப்பதற்கும், கால்நடைகளைக் காவல் காப்பதற்கும், போர்களில் எதிரிகளைத் தாக்குவதற்கும் வெகு நாட்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாயுக் கசிவை கண்டுபிடிப்பதற்கும் அவை உபயோகப்படுகின்றன. முதன்முதலாக கிழக்கு ஜெர்மனியில் இப்பணிக்காகப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்போது அவை பல நாடுகளில் அப்பணியைச் செய்கின்றன. பூமியில் உள்ள கனிம வளங்களைக் கண்டுபிடிப்பதற்கு நாய்கள் ரஷியாவில் பழக்கப்படுத்தப்பட்டன. மனிதர்களைப்போல ஆயிரம் மடங்கு கரிமமல்லாத (non organic) பொருட்களை மோப்பம் பிடிப்பதிலும், லட்சக்கணக்கான மடங்குகள் கரிமப்பொருட்களை மோப்பம் பிடிப்பதிலும் நாய்கள் வல்லவை.

டெஸ்மன்ட் மாரிஸ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்களின் இனங்களை வகைப்படுத்தி புத்தகமொன்றை வெளியிட்டிருக்கிறார். பார்வை வேட்டை நாய்கள் (sight hounds), மோப்ப வேட்டை நாய்கள் (scent hounds), இரையை மீட்கும் நாய்கள் (retrievers), சண்டை நாய்கள் என்று பல்வேறுவிதமாக அவற்றைப் பிரித்துள்ளார்.

திபெத்தில் ஒரு விநோதப் பழக்கம் இருந்தது. இறந்து போனவர் சடலத்தை ஊருக்கு வெளியே மண் குவியலின் மீது கிடத்துவார்கள். அந்த சடலத்தை நாய்கள் வேகமாகச் சாப்பிட்டு முடித்தால் அந்த நபர் விரைவில் சொர்க்கத்துக்குச் செல்வார் என்று ஐதீகம். இப்பணியைச் செய்தவை குறிப்பிட்ட வகையைச் சார்ந்தவை. அவற்றிற்கு சடல நாய்கள் (corpse dogs) என்று பெயர். அவை வளர்ப்போர் யாருமின்றி காட்டுப்பகுதியில் வாழ்ந்தன.

தஞ்சாவூரில் ‘அலங்கு’ என்ற வேட்டை நாய் இருந்ததாக டெஸ்மன்ட் மாரிஸ் குறிப்பிடுகிறார். அதன் உயரம் 69 செ.மீ., திரட்சியான தசைகள். பெரிய கோவிலில் இருக்கும் சுவரோவியங்களில் அலங்கு வரையப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். காணாமல் போன அரிய நாய் வகைகளில் இதுவும் ஒன்று.

அதைப்போலவே ‘ஷெங்கோட்டா’ என்கிற திருவனந்தபுரத்தைச் சார்ந்த நாய் வகையும் இன்று இல்லை. ஜோடி ‘ஷெங்கோட்டா’ நாய்கள் புலியைக்கூட வீழ்த்திவிடும் ஆற்றல் கொண்டவை. அதன் வகையைச் சார்ந்த ‘கோம்பை’ இன்றும் இருக்கிறது. ‘கிரேட் டேனை’ப்போல தோற்றத்திலிருக்கும் ராஜபாளையம் சிறந்த காவல் நாயும்கூட. சின்ன சத்தத்திற்கே உஷாராகிவிடுகிற தீவிர கவனம் கொண்டவை.

காட்டுக் கோழிகளை வேட்டையாடுவதற்கு ‘கோல்டன் ரிட்ரீவர்’ என்ற நாய் இனவிருத்தி செய்யப்பட்டது. வேட்டையாடிய பொருட்களை மீட்டுக்கொண்டு வருவதற்குப் பழக்கப்படுத்தப்பட்ட ‘லேபரடார்’ நாய்கள், காவல் துறையில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டவும் இவை பயன்படுகின்றன. நியூ பவுண்ட் லேண்ட் என்கிற இடத்தில் மீனவர்கள் விரித்த வலைகளை கரைக்குக் கொண்டுவர இவற்றைப் பயன்படுத்தினர். இங்கிலாந்தில் அதிகம் பிரசித்தமானது ‘காக்கர் ஸ்பேனியல்’ என்ற நாய்.

ஜெர்மனியைச் சார்ந்த லூயி டோபர்மேன் என்கிற வரி ஆய்வாளர் பல நாய்களைக் கலந்து ஒரு நாய் ரகத்தை உருவாக்கினார். அது அவர் பெயரிலேயே அழைக்கப்பெற்றது. ஆக்ரோஷமான இந்த நாய் தன் வாலையே கடித்துக்கொள்ளும் என்பதால், குட்டியிலேயே அதன் வாலை வெட்டிவிடுவார்கள் என்பார்கள். உண்மை அதுவல்ல. அழகுக்காகவே வால் வெட்டப்படுகிறது. இப்போது அவ்வாறு செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

‘ஜெர்மன் ஷெபர்ட்’ தொடக்கத்தில் பண்ணை நாயாக இருந்தது. முதலாம் உலகப் போரில் ஜெர்மனி இதைப் பயன்படுத்தியது. உடனே இது அமெரிக்காவிற்கும் மற்ற ஆங்கிலேய நாடுகளுக்கும் பரவியது. அதிக நுண்ணறிவு கொண்ட இதை ‘அல்சேஷன் உல்ப் டாக்’ என்றும் அழைப்பார்கள். ‘பெல்ஜியன் மேலிநாயிஸ்’ என்கிற நாய் ஆடுகளுக்குக் காவல் புரிய பெல்ஜியத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இதுவும் ஜெர்மன் ஷெபர்ட் போலவே இருக்கும். எல்லைக் காவலுக்கும், மோப்பம் பிடிப்பதற்கும் உகந்தது.

நாய்களை சண்டைக்காக மோதவிட்டு சூதாடுவது வழக்கமாக இருந்தது. கட்டிப்போடப்பட்ட மனிதர்களின் மீது நாய்களை ஏவி வேடிக்கை பார்ப்பது ரோமாபுரியில் கண்காட்சி வித்தையாக இருந்தது. கரடிகளைத் தூணில் கட்டி வேட்டை நாய்களை அவிழ்த்துவிட்டு அவை கரடியைக் கிழிப்பதைப் பார்த்து கைதட்டும் பழக்கம் இங்கிலாந்தில் இருந்தது. முதலாம் எலிசபெத் ராணி காலத்தில் இது அதிகம் நடந்தது. காளைகளைக் கடிப்பதற்காக ‘இங்கிலிஷ் புல்டாக்’ என்கிற ரகத்தை வளர்த்தெடுத்தார்கள்.

நாய்களுக்கு நுண்ணறிவு அதிகம். விரைவில் கற்றுக்கொள்ளும் ஆற்றல் கொண்டவை. மென்மையான சமிக்ஞைகளையும் அவற்றால் புரிந்துகொள்ள முடியும்.

அண்மைக் காலங்களில் வனவிலங்குகள் குறித்த குற்றங்கள் பல இடங்களில் அதிகரித்து வருகின்றன. இயற்கை ஆர்வலர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருப்பதால் ஊடக வெளிச்சத்திலும் இச்சம்பவங்கள் விழுந்து மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. இவற்றைக் குறைப்பதற்காக பல மாநிலங்களைச் சார்ந்த வனத்துறையினர் மோப்ப நாய்களையும், வழித்தடமறியும் நாய்களையும் பயன்படுத்த முடிவுசெய்துள்ளனர்.

குவாலியரில் உள்ள நாய்கள் தேசியப்பயிற்சி நிலையம், ஆறிலிருந்து ஒன்பது மாதங்கள் நிறையப் பெற்ற 13 குட்டிகளுக்கு பயிற்சியளிக்கத் தொடங்கியிருக் கிறது. பயிற்சி முடிந்ததும் உத்தரப்பிரதேசம், சிக்கிம், அந்தமான் நிக்கோபார் ஆகிய இடங்களுக்கு மோப்ப நாய்ப்படைகள் முதல்முறையாக அனுப்பப்படும். அதைப் போலவே மேற்கு வங்கம், உத்தரகாண்ட், ஒடிசா, கேரளா ஆகியவற்றிற்கும் இவை அனுப்பப்படும். இந்த நாய்கள் வேட்டையாடுவதைத் தடுக்க உதவும். ஒவ்வொரு நாயோடு அவற்றைக் கையாள இரண்டு வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். ஜெர்மன் ஷெபர்ட், பெல்ஜியன் மேலிநாயிஸ் ஆகிய ரகங்கள் இப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

வேட்டையாடப் பயன்படுத்திய நாய்களை வேட்டையைத் தடுக்கவும் உபயோகப்படுத்த முடியும் என்பது ‘பயன்பாட்டிலுள்ளது, கத்தியும் புத்தியும்’ என்கிற சேதியைச் சொல்கிறது.

(செய்திகள் தொடரும்)

நாயின் மூதாதையர்

அமெரிக்க விலங்கியல் நிபுணர் ஜான் பால் ஸ்காட் ஓநாய்களிலிருந்து நாய்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று தெளிவாக்கியிருக் கிறார். நாய்களுக்கு 90 பிரத்யேகமான நடவடிக்கைக் கூறுகள் இருக்கின்றன. அவற்றில் 71 ஓநாய்களுக்கு இருக்கின்றன. நரிகளுக்கோ இன்னும் குறைவாகவே இருக்கின்றன. எனவே ஓநாயே நாயின் மூதாதையர். இரண்டிலும் குரைப்பதற்கும், ஊளையிடுவதற்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. 

Next Story