மாவட்டத்தில் பிறப்பு சதவிகிதம் குறைந்துள்ளது கலெக்டர் சிவஞானம் பேச்சு
விருதுநகரில் நடைபெற்ற உலக மக்கள் தொகை குறித்த கருத்தரங்கில், மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பிறப்பு சதவீதம் குறைந்துள்ளது என்று கலெக்டர் சிவஞானம் கூறினார்.
விருதுநகர்
மாவட்டம் நிர்வாகம் சார்பில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கிய ஊர்வலத்தை கலெக்டர் சிவஞானம் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் சுப்பையாநாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளியை சேர்ந்த ஏராளமான மாணவ–மாணவிகள் கலந்து கொண்டு மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்றனர். ஊர்வலம் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள அரசு அருங்காட்சியகம் வரை சென்றடைந்தது. முன்னதாக உலக மக்கள் தொகை உறுதிமொழியை கலெக்டர் தலைமையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ–மாணவிகள் எடுத்து கொண்டனர்.
இதனைதொடர்ந்து அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற உலக மக்கள் தொகை–2017 குறித்த கருத்தரங்கில் கலெக்டர் சிவஞானம் பேசியதாவது:– 1987–ம் ஆண்டு உலக மக்கள் தொகை 500 கோடியை தாண்டியது. மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து உலக மக்களிடையே ஐக்கிய நாடுகள் சபை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா இன்னும் சில ஆண்டுகளில் சத்தி வாய்ந்த நாடாக வளரும் என்று சொல்வதற்கு காரணம், உலக மக்கள் தொகையில் பெரும்பகுதி நம் நாட்டில் உள்ளது. நம் நாட்டின் மக்கள் தொகையை சமுதாய வளர்ச்சிக்கும், தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும். நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகளையும், பாதிப்புகளையும் தெரிந்து கொண்டு விழிப்புணர்வோடு செயல்பட்டு நாட்டினுடைய வளர்ச்சிக்கு உதவியாக இருக்க வேண்டும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் உலக மக்கள் தொகை 733.6 கோடியாகவும், இந்திய மக்கள் தொகை 121 கோடியாகவும், தமிழ்நாடு மக்கள் தொகை 7.21 கோடியாகவும் உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19 லட்சத்து 42 ஆயிரத்து 288 மக்கள் தொகை உள்ளது. மேலும் விருதுநகர் மாவட்டத்தின் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் 16.3 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு 15.6 சதவீதமாக பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சி முடிவில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.