கர்ஜத்தில் பலத்த மழை தந்தை- மகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் ஒருவர் உடல் மீட்பு


கர்ஜத்தில் பலத்த மழை தந்தை- மகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் ஒருவர் உடல் மீட்பு
x
தினத்தந்தி 24 July 2017 4:10 AM IST (Updated: 24 July 2017 4:10 AM IST)
t-max-icont-min-icon

கர்ஜத்தில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீரோடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தந்தை, மகள் அடித்து செல்லப்பட்டனர். இதில் ஒருவர் உடல் மீட்கப்பட்டது.

மும்பை,

கர்ஜத்தில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீரோடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தந்தை, மகள் அடித்து செல்லப்பட்டனர். இதில் ஒருவர் உடல் மீட்கப்பட்டது.

தந்தை, மகள்


மும்பை தாராவியை சேர்ந்தவர் கிரண் போர்டே(வயது36). இவரது மகள் தேஜஸ்(13). இவர்கள் நேற்றுமுன்தினம் உறவினர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ராய்காட் மாவட்டம் கர்ஜத் தாலுகாவில் உள்ள அஷ்கானே அருவிக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தனர். அப்போது சிறுமி தேஜஸ் அங்குள்ள நீரோடையில் இறங்கி குளித்து கொண்டிருந்தாள்.

அங்கு பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக நீரோடையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிறுமி தேஜஸ் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டாள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிரண் போர்டே அவளை காப்பாற்றுவதற்காக நீரோடையில் குதித்தார். இதில் அவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்து அவரது உறவினர்கள் கதறினார்கள்.

பிணமாக மீட்பு

உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கினார்கள். வெகுநேரத்திற்கு பிறகு கிரண் போர்டே சுமார் 3 கி.மீ. தொலைவில் பிணமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த அப்பகுதி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமி தேஜசை தேடும் பணி தொடர்ந்தது. இருப்பினும் நேற்று வரையிலும் அவள் மீட்கப்படவில்லை. அவளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்திருக்க கூடும் என போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story