ஏழைகளுக்கு உதவி செய்யும் வகையில் இலவச அரிசியை விட்டுக் கொடுக்க வேண்டும்


ஏழைகளுக்கு உதவி செய்யும் வகையில் இலவச அரிசியை விட்டுக் கொடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 31 July 2017 5:00 AM IST (Updated: 31 July 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

ஏழை மக்களுக்கு உதவி செய்யும் வகையில் இலவச அரிசியை எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் இலவச அரிசியை விட்டு கொடுக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்தார்.

திருக்கனூர்,

புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே கைக்கிலப்பட்டு – சுத்துக்கேணி கிராமத்துக்கு இடையே சங்கராபரணி ஆற்றில் ரூ.31 கோடி செலவில் படுகை அணையுடன் கூடிய மேம்பாலம் கட்டும்பணி கடந்த 2013–ம் ஆண்டு தொடங்கியது. இந்த பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தன. தற்போது பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

தனியாருக்கு சொந்தமான இடமாக இருப்பதால் மேம்பாலத்தின் இரு பகுதியிலும் இணைப்புச் சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தி ஏற்கனவே தினத்தந்தியில் வெளியாகி இருந்தது. இதுமட்டுமின்றி இணைப்பு சாலை பணிக்கு மண் நிரப்புவதில் முறைகேடு நடந்து இருப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கவர்னர் கிரண்பெடிக்கு புகார் தெரிவித்து இருந்தனர்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவையில் இருக்கும்போது கவர்னர் கிரண்பெடி பல்வேறு ஆய்வு பணிகளில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி திருக்கனூர் அருகே கைக்கிலப்பட்டு–சுத்துக்கேணி சங்கராபரணி ஆற்றில் புதிதாக கட்டப்படும் மேம்பாலம் குறித்த பணியை நேற்று ஆய்வு செய்தார். இதற்காக நேற்று காலை கவர்னர் மாளிகையில் இருந்து நேற்று அவர் அதிகாரிகளுடன் புறப்பட்டு சங்கராபரணி ஆற்றில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ள இடத்துக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்கு வந்த கிரண்பெடியை என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. டி.பி.ஆர். செல்வம் சால்வை அணிவித்து வரவேற்றார். மண் நிரப்பியதில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட புகார் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கவர்னர் விசாரணை நடத்தினார்.

அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் காட்டேரிக்குப்பம் ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டு நிரப்பப்பட்டதாக தெரிவித்தனர். இந்த பணிகள் எப்போது நிறைவு பெறும் என்று கவர்னர் கேட்டார். செப்டம்பர் மாதத்திற்குள் இணைப்பு சாலை பணிகள் நிறைவுடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது அங்கிருந்த கைக்கிலப்பட்டு காலனி பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் கவர்னருக்கு சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். நீங்கள் சென்றமுறை இங்கு வந்தபோது இங்கிருந்த சாராயக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதை ஏற்று சாராயக்கடை அகற்றியதற்கு அவரிடம் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

இதையடுத்து காட்டேரிக்குப்பம் ஏரிக்கு கவர்னர் கிரண்பெடி காரில் சென்றார். அங்கு காரைவிட்டு இறங்கிய அவர் 250 மீட்டர் தூரத்தில் உள்ள ஏரிக்கு சேறு, சகதி வழியாக நடந்தே சென்றார். பின்னர் மண் எடுத்த இடத்தை பார்வையிட்டார்.

இதனையடுத்து முறைகேடு நடந்ததாக புகார் கூறிய தரப்பினரிடம் கவர்னர் விசாரணை நடத்தினார். அதனைதொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு புதுவை கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டார்.

இந்த ஆய்வில் புதுவை தலைமை பொறியாளர் ரகுநாத், வில்லியனூர் சப்–கலெக்டர் உதயகுமார், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையார் சீத்தாராமன், கொம்யூன் பஞ்சாயத்து மேலாளர் அன்பழகன், வடக்கு போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

முன்னதாக கவர்னர் கிரண்பெடியிடம் அனைத்து ரே‌ஷன் அட்டைகளுக்கும் இலவச அரிசி வழங்குவது தொடரும் என்று அரசு அறிவித்துள்ளதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:–

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வசதி படைத்தவர்கள் மானிய சிலிண்டர்களை விட்டுத் தரவேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. அதனை ஏற்று பலர் மானிய சிலிண்டர்களை விட்டுக் கொடுத்தனர். அதுபோல் புதுவையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், வசதி படைத்தவர்கள், அரசு அதிகாரிகள், வருமானவரி செலுத்துவோர் இலவச அரிசியை விட்டுக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் மீதமாகும் தொகையை ஏழைகளுக்கு உதவிடும் வகையில் வேறு திட்டங்களுக்கு செலவிடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது உடனிருந்த டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. இலவச அரிசியை விட்டு கொடுப்பதாக தெரிவித்தார். இதற்காக அவரை கவர்னர் கிரண்பெடி பாராட்டினர்.


Next Story