கடலில் மூழ்குவோரை காப்பாற்ற மெரினாவில் தினமும் போலீஸ் குவிப்பு


கடலில் மூழ்குவோரை காப்பாற்ற மெரினாவில் தினமும் போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 31 July 2017 7:45 AM IST (Updated: 31 July 2017 2:31 AM IST)
t-max-icont-min-icon

கடலில் மூழ்குவோரை காப்பாற்ற, மெரினாவில் போலீஸ் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மெரினாவில் தினமும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். கதிராமங்கலத்தில் பொதுமக்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாகவும், ஜல்லிக்கட்டு போராட்டத்தைப்போல இந்த போராட்டமும் பெரிய அளவில் நடக்கப்போவதாகவும் வாட்ஸ் அப்பில் தினமும் தகவல் வெளியான வண்ணம் உள்ளது.

அது போன்ற ஒரு போராட்டக்களத்தை மீண்டும் மெரினாவில் உருவாக விடாமல் தடுக்கும் நோக்கத்துடன், போலீசார் குவிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகிறது. ஆனால் அதற்காக தனியாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும், கடலில் குளிக்கும்போது மூழ்கி உயிர் இழப்பு ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்துடனும், தனியாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் நேற்று கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கூறி இருப்பதாவது:-

மெரினா கடற்கரை பகுதியை சுற்றிப்பார்க்க வரும் பொதுமக்களில் சிலர் கடல் அலையின் வேகத்தை அறியாமல் கடலின் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்கும்போது, கடல் அலைகளால் அடித்து செல்லப்பட்டு துரதிருஷ்டமாக உயிர் இழந்து விடுகிறார்கள். இதனை தடுக்க, சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில், கடலில் மூழ்கி பொதுமக்கள் உயிர் இழப்பதை தடுக்கும் பொருட்டு, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் மெரினா கடற்கரை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

விடுமுறை நாட்களில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு, கடற்கரை ஓரமாக கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை ஓரமாக மணல் பகுதியில், அபாயகரமான கடல் பகுதி, குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகளும், தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடற்கரை பகுதியில் சிறப்பு ஒலிபெருக்கி வசதி மற்றும் எச்சரிக்கை சுழல் விளக்குடன் கூடிய ரோந்து வாகனங்களும் போலீசாருடன் ரோந்து சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குதிரைப்படை போலீசாரும் கடற்கரை மணல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடலில் மூழ்குபவர்களை மீட்க, நீச்சல் பயிற்சி பெற்ற மீனவர்களும் கடற்கரை பகுதியில் தயார் நிலையில் உள்ளனர்.

மேற்கண்டவாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story