முறையாக குடிநீர் வழங்கக்கோரி நகராட்சி ஆணையாளர் வீடு முற்றுகை


முறையாக குடிநீர் வழங்கக்கோரி நகராட்சி ஆணையாளர் வீடு முற்றுகை
x
தினத்தந்தி 1 Aug 2017 3:45 AM IST (Updated: 31 July 2017 11:27 PM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் நகராட்சி ஆணையாளரின் வீட்டை முற்றுகையிட்டதுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

பரமக்குடி,

பரமக்குடி நகராட்சி பகுதியானது 36 வார்டுகளை கொண்டது. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். தற்போது இங்கு 7 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் தேவையான அளவு கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பலர் குடிநீர் குழாய்களில் மின் மோட்டார்களை பொருத்தி குடிநீர் உறிஞ்சி விடுவதாகவும் கூறப்படுகிறது. குழாய்களில் சரியாக தண்ணீர் வருவதில்லை எனவும் நகராட்சி அதிகாரிகளால் முழுமையாக குடிநீர் திருட்டை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் நகரின் கிழக்கு பகுதியில் 4 வார்டுகளில் நேற்று காலை வழங்கப்பட்ட குடிநீர் சிறிது நேரத்திலேயே நின்று விட்டது. ஏராளமானோருக்கு குடிநீர் கிடைக்கவில்லை. ஆனால் மின் மோட்டார் பொருத்தியவர்களுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் திரண்டு சென்று தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள நகராட்சி ஆணையாளர் நாராயணனின் வீட்டை முற்றுகையிட்டனர். பின்பு அவரது வீட்டின் முன்பு மதுரை-ராமேசுவரம் சாலையில் மறியல் செய்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்தனர். நகராட்சி ஆணையாளர் நாராயணன் மற்றும் போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் சார்பில், தங்களுக்கு தேவையான அளவு குடிநீரினை முறையாக வழங்க வேண்டும், மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பதை தடுப்பதுடன், மின் மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும், குடிநீர் வரும் நாளில் காலை 5 மணி முதல் 7 மணி வரை மின் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story