அலங்காநல்லூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலி
அலங்காநல்லூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலியானார். அவரது குடும்பத்திற்கு மாணிக்கம் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டியை சேர்ந்தவர் இளையபெருமாள் இவருடைய மகள் அழகுமீனா (வயது8). இந்த சிறுதி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில் அழகுமீனாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை,சிறுமிக்கு டெங்கு பாதிப்பு இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாணவி அழகுமீனா பரிதாபமாக இறந்து போனாள். இதுபற்றி கேள்விபட்ட சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம் முடுவார்பட்டி கிராமத்திற்கு சென்று மாணவியின் பெற்றோர்களிடம் ஆறுதல் கூறினார்.
பின்னர் எம்.எல்.ஏ. அங்குள்ள கழிவுநீர் வாய்க்கால்களை பார்வையிட்டு சுகாதாராப் பணிகள் குறித்தும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரினேசன் செய்யப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து மர்ம காய்ச்சல், டெங்கு வராமல் தடுப்பதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி, நிலைய அலுவலர் மீனாட்சிசுந்தரம், ஊரக வளர்ச்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் தேவையான இடங்களில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் மருத்துவ குழுவினர் முடுவார்பட்டியில் முகாமிட்டு கண்காணித்து டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.