வாடகை பணம் கொடுக்காததால் தகராறு வடமாநில வாலிபர் குத்திக்கொலை
வாடகை பணம் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் வடமாநில வாலிபரை குத்திக்கொலை செய்ததாக அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
சோழிங்கநல்லூர்,
சோழிங்கநல்லூர் நேரு நகரில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சித்திக்மியா(வயது 34), தல்வார்(28), சுமன்அகமது(35), அபிதாகிர்(40) ஆகிய 4 பேர் வாடகை வீட்டில் தங்கி, கூலி வேலை செய்து வந்தனர். இதில் சித்திக்மியா வெல்டிங் வேலையும், தல்வார் காவலாளியாகவும் வேலை பார்த்து வந்தனர். வீட்டு வாடகையை நண்பர்களான 4 பேரும் பகிர்ந்து கொடுத்து வந்தனர்.
சித்திக்மியா, தன்னுடன் தங்கி உள்ளவர்களிடம் வாடகை பணத்தை மாதம்தோறும் வசூல் செய்து வீட்டு உரிமையாளரிடம் கொடுப்பது வழக்கம். ஆனால் கடந்த 2 மாதங்களாக அவர், வாடகை பணத்தை வசூலித்து விட்டு வீட்டு உரிமையாளரிடம் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
குத்திக்கொலை
நேற்று முன்தினம் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது போதையில் இருந்த தல்வார், வாடகை பணம் கொடுக்காதது குறித்து சித்திக் மியாவிடம் கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த சித்திக்மியா, குடிபோதையில் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் தல்வாரின் மார்பில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த தல்வார், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
நண்பர் கைது
இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், கொலையான தல்வாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையான தல்வாரின் நண்பரான சித்திக்மியாவை நேற்று அதிகாலை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story