குளச்சல் போர் வெற்றித்தூணுக்கு கலெக்டர், ராணுவ வீரர்கள் மரியாதை
குளச்சல் போர் வெற்றித்தூணுக்கு கலெக்டர், ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர்.
குளச்சல்,
இந்தியாவில் மன்னராட்சி நடந்த போது குமரி மாவட்ட பகுதிகள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தை மன்னர் மார்த்தாண்டவர்மா ஆண்டு வந்தார். அப்போது இந்தியாவில் வியாபாரம் செய்து வந்த டச்சுபடையினருக்கும், மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கும் இடையே போர் மூண்டது.
மார்த்தாண்ட வர்மாவின் படைகளை தாக்க டச்சு படையினர் கப்பல் மூலம் குளச்சல் கடற்கரைக்கு வந்தனர். 1741–ம் ஆண்டு குளச்சல் கடற்கரையில் கடும்போர் நடந்தது.
இப்போரில் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் படைகள் டச்சு படைகளை வீழ்த்தி வெற்றிகண்டன. ஜூலை மாதம் 31–ந் தேதி இந்த வெற்றியை மன்னர் மார்த்தாண்ட வர்மா பெற்றார். இந்த வெற்றிக்கு துணையாக நின்று போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக அவர் குளச்சலில் வெற்றித்தூண் ஒன்றை நிறுவினார்.
அதன்பின்பு வீரர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் விக்டரி தூண் முன்பு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இந்தியாவில் மன்னராட்சி முடிந்து மக்களாட்சி மலர்ந்த பின்னும் குளச்சல் விக்டரி தூணுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது.
அதன்படி நேற்று 276–வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க குளச்சலுக்கு திருவிதாங்கூர் 9–வது பட்டாலியன் தி மெட்ராஸ் ரெஜிமன்ட் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் வந்திருந்தனர்.
அவர்கள் குளச்சல் காணிக்கை மாதா ஆலயம் அருகே அமைந்துள்ள வெற்றி நினைவு தூண் வளாகத்தை தூய்மை படுத்தி அஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். இதில் குமரி மாவட்ட நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர். நினைவு ஸ்தூபி அமைந்துள்ள பகுதியில் உள்ள புடைப்பு ஓவியங்கள் மற்றும் பூங்காவை சீரமைத்து தூய்மை படுத்தினர்.
நேற்று காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் மற்றும் அதிகாரிகள் குளச்சலுக்கு சென்றனர். அங்குள்ள வெற்றித்தூணுக்கு அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதுபோல ராணுவ வீரர்களும் விக்டரி தூண் முன்பு அணிவகுப்பு நடத்தி துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். இதில் அப்பகுதி மக்களும் பங்கேற்றனர்.