மதுக்கடையை மூடக்கோரி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரை முற்றுகையிட்ட பொதுமக்கள்


மதுக்கடையை மூடக்கோரி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 1 Aug 2017 4:15 AM IST (Updated: 31 July 2017 11:36 PM IST)
t-max-icont-min-icon

மதுக்கடையை மூடக்கோரி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாவட்ட கலெக்டர் பொன்னையா காரில் வந்தார்.

அப்போது ஸ்ரீபெரும்புதூர் அடுத்த திருமங்கலம் மற்றும் மொளச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருமங்கலம், திருமங்கலம் கண்டிகை, மொளச்சூர், பள்ள மொளச்சூர், வாசினாம்பட்டு, திருமேனிக்குப்பம் ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள், மாவட்ட கலெக்டரை முற்றுகையிட்டனர்.

பின்னர் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:–

மதுக்கடையை மூட வலியுறுத்தல்

திருமங்கலம், மொளச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட 6 கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த மே மாதம் இந்த பகுதிகளில் திறக்கப்பட்ட 2 மதுக்கடைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் மதுக்கடைகள் மூடப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அந்த மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.

இந்த மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ள பகுதியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். அருகிலேயே தனியார் பள்ளியும், உழவர் சந்தையும் உள்ளது. இதனால் போதை ஆசாமிகளால் பள்ளி மாணவிகளும், பெண்கள் பெரிதும் பாதிக்கப்படு
கிறார்கள்.

எனவே மொளச்சூர், திருமங்கலம் ஊராட்சியில் உள்ள மதுக்கடைகளை பொதுமக்கள், மாணவ–மாணவிகள் நலன் கருதி நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story