குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 1 Aug 2017 3:30 AM IST (Updated: 31 July 2017 11:39 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்,

செஞ்சி தாலுகா நாகந்தூர் கிராம மக்களுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் தினமும் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடும் வறட்சி காரணமாக கடந்த ஒரு மாதமாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதைதொடர்ந்து குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பலமுறை வல்லம் ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50–க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று குடிநீர் பிரச்சினையை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த திடீர் போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் பிடாகம் கிராமத்தில் கடந்த 20 நாட்களாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த கிராம மக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.


Next Story