பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல்


பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல்
x
தினத்தந்தி 1 Aug 2017 4:00 AM IST (Updated: 1 Aug 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக்கோரி சத்தியமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே உள்ள கோவை-ஈரோடு செல்லும் ரோட்டில் நேற்று காலை 10 மணி அளவில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் மற்றும் காங்கிரஸ், தி.மு.க. கட்சியினர் உள்பட சுமார் 2 ஆயிரம் விவசாயிகள் ஒன்று கூடினார்கள். பின்னர் அவர்கள் ரோட்டில் உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் கோவை-ஈரோடு ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, தாசில்தார் புகழேந்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த 30 ஆண்டுகளாக பவானி ஆற்றில் இருந்து பாசனத்துக்கு அரசின் அனுமதியுடன் முறைப்படி மின்இணைப்பு பெற்று தண்ணீர் எடுத்து வருகிறோம். இந்த நிலையில் குடிநீருக்கு தண்ணீர் தேவைப்படுவதால் ஆற்றில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் எடுக்க வேண்டாம் என்று கலெக்டர் பிரபாகர் கூறினார். அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்தோம்.

இந்த நிலையில் நாங்கள் கலெக்டரை நேரில் சந்தித்து, ‘எங்கள் பயிர் நாசமாவதற்கு முன்பு நிபந்தனையுடன் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தோம். அதற்கு அவர், குடிநீருக்கு மட்டுமே ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே மின்மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சக்கூடாது என்று உறுதியுடன் கூறிவிட்டார். எனவே எங்களுக்கு உடனடியாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரி இந்த சாலை மறியலில் ஈடுபட்டோம். அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து எங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று உறுதி கூறினால் தான் சாலை மறியலை கைவிடுவோம். இல்லையென்றால் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. விவசாயிகள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள், “கொல்லாதே கொல்லாதே விவசாயிகளை கொல்லாதே”, “சீண்டாதே சீண்டாதே விவசாயிகளை சீண்டாதே”, “வேண்டும் வேண்டும் வாடும் பயிர்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்”, “வஞ்சிக்காதே வஞ்சிக்காதே வஞ்சிக்காதே”, “துண்டிக்காதே துண்டிக்காதே மின்சாரத்தை துண்டிக்காதே”, “எதிரொலிக்கும் எதிரொலிக்கும் எங்கள் எண்ணம் தேர்தலில் எதிரொலிக்கும்” போன்ற கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து கோபி ஆர்.டி.ஒ. கோவிந்தராஜன், பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் திருமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ராமசாமி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாயிகளை அழைத்து பேசினார்கள். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விவசாயிகளும், அரசு அதிகாரிகளும் கூடி பேசுவது, அதுவரை மின்இணைப்பு துண்டிப்பு செய்வதில்லை. வழக்கம்போல் விவசாயிகள் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம்’ என்று முடிவு செய்யப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் 12 மணி அளவில் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் கோவை-ஈரோடு ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story