தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் கட்சி சார்பிலும், ஆதித்தமிழர் பேரவை சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மனு அளிப்பதற்காக ஆதித்தமிழர் பேரவையின் தூய்மை தொழிலாளர் பேரவையினர் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ‘தேனி அல்லிநகரம் நகராட்சியில், துப்புரவு பணியாளர்களின் சம்பளத்தில் கடன்பிடித்தம் செய்த 6 மாத தொகையினை உடனடியாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. அதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
அதேபோல், ஆதித்தமிழர் கட்சி சார்பிலும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ‘தேனி மாவட்டத்தில் தொடர்ந்து வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. இதனை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.