10 ஆண்டுகளாக உதவித்தொகை கிடைக்காததால் அசல் சான்றிதழை ஒப்படைக்க வந்த மாற்றுத்திறனாளி


10 ஆண்டுகளாக உதவித்தொகை கிடைக்காததால் அசல் சான்றிதழை ஒப்படைக்க வந்த மாற்றுத்திறனாளி
x
தினத்தந்தி 1 Aug 2017 4:00 AM IST (Updated: 1 Aug 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

10 ஆண்டுகளாக உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தும் கிடைக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் அசல் சான்றிதழை ஒப்படைக்க வந்த மாற்றுத்திறனாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

திட்டக்குடி அருகே கீழ்ஆதனூர் வடக்குதெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் செந்தில்குமார் (வயது 34). மாற்றுத்திறனாளி. இவர் தனக்கு அரசின் உதவித்தொகை கேட்டு திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக விண்ணப்பித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் இதுவரை அவருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை.

பின்னர் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனு மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் தான் படித்த சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, 94 சதவீதம் ஊனம் அடைந்ததற்கான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அசல் சான்றிதழ்களை கலெக்டரிடம் ஒப்படைப்பதற்காக வந்திருந்தார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திட்டக்குடி தாசில்தார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இன்னும் ஒரு வாரத்தில் அரசின் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதை கேட்ட செந்தில்குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இது பற்றி செந்தில்குமார் கூறுகையில், நான் 94 சதவீதம் மாற்றுத்திறனாளி. தமிழக அரசு வழங்கும் மாத உதவித்தொகை கேட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அலைகிறேன்.

ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. கலெக்டரை சந்திப்பதற்காக நேற்று மாலை (அதாவது நேற்று முன்தினம்) 5 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டேன். இரவு 1 மணிக்கு கடலூர் பஸ் நிலையம் வந்து, அங்கு தங்கி, இன்று (நேற்று) கலெக்டரை சந்தித்து முறையிட வந்தேன். தற்போது எனக்கு உதவித்தொகை கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர். இதனால் நம்பிக்கையோடு செல்கிறேன் என்றார்.

இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story