சென்னை சூளையில் புத்தகங்கள் வைக்கப்பட்டு இருந்த பழைய வீடு எரிந்து நாசம்
சென்னை சூளை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் புத்தகங்கள் வைக்கப்பட்டு இருந்த பழைய வீடு எரிந்து நாசம்.
சென்னை,
சென்னை சூளை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள ஒரு பழைய வீட்டின் முதல் மாடியில் இருந்து நேற்று காலை கரும்புகை வெளியே வந்தது. இதை பார்த்த அருகில் நின்ற பொதுமக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் வீட்டின் முதல் தளத்தில் தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. பின்னர் தகவலின் பேரில் வியாசர்பாடி தீயணைப்பு அதிகாரி கணேசன் தலைமையில் 6 தீயணைப்பு வீரர்கள் வந்து வீட்டில் பற்றி எரிந்த தீயை சுமார் ஒரு மணி நேரமாக போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பல பொருட்கள் எரிந்து நாசமாகின.
இந்த சம்பவம் குறித்து வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதும், அந்த வீட்டின் உரிமையாளர் சென்னை சூளையை சேர்ந்த பிரீஸ் (வயது 55) என்பதும், அவர் தற்போது இந்த வீட்டை புத்தகங்களும், சில பழைய பொருட்களும் வைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தியதும் தெரியவந்தது.
Related Tags :
Next Story