வீட்டை காலி செய்ய சொல்வதற்கு எதிர்ப்பு: 4 பெண் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி


வீட்டை காலி செய்ய சொல்வதற்கு எதிர்ப்பு: 4 பெண் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி
x
தினத்தந்தி 1 Aug 2017 4:30 AM IST (Updated: 1 Aug 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

வீட்டை காலி செய்ய சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4 பெண் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

கோவை குறிச்சி நாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 45). கூலி தொழிலாளி. இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ரம்யா(10), மகா(6), பிரிசில்லா(4), பிரபா(3) ஆகிய 4 மகள்கள் உள்ளனர். ராஜா வசித்த வீடு அருகே ஒரு பாம்பு புற்று இருந்தது. இதனால் அதே பகுதியை சேர்ந்த சிலர் அந்த இடத்தில் கோவில் கட்ட முடிவு செய்தனர். இதனால் ராஜாவிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும், ராஜாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதுகுறித்து ராஜா போத்தனூர் போலீசில் புகார் செய்தார். மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ராஜா வேதனையடைந்தார்.

இந்த நிலையில் ராஜாவிடம் அதே பகுதியை சேர்ந்த சிலர் வீட்டை காலி செய்ய வலியுறுத்தி நெருக்கடி கொடுத்து வந்தனர். இந்த நிலையில் ராஜா கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு தனது 4 மகள்களுடன் வந்தார்.

அவர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும் மையத்துக்கு முன்பு சென்ற போது திடீரென்று தான் வைத்திருந்த பையில் இருந்து பாட்டிலை எடுத்த ராஜா அதில் இருந்த மண்எண்ணெய்யை தன் மீதும் குழந்தைகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து சென்று ராஜா கையில் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கினார்கள். பின்னர் அவர் களை தடுத்து நிறுத்தி வெளியே அழைத்து வந்தனர்.

அவர்கள் அனைவரையும் போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு கொண்டு வந்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள். அதன்பின்னர் அவர்களை ஒரு வேனில் ஏற்றி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது ராஜா, கூறுகையில், ‘4 பெண் குழந்தைகளுடன் நான் வசிக்கும் வீட்டை காலி செய்யச் சொல்லி சிலர் கெடுபிடி செய்ததால் வேறு வழியின்றி எனது குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றேன்’ என்றார். இதைத்தொடர்ந்து தொழிலாளி ராஜாவுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வருபவர்களை போலீசார் சோதனை செய்து தான் அனுப்புவது வழக்கம். ஆனால் போலீசாரின் சோதனையையும் மீறி ராஜா மண்எண்ணெய் பாட்டிலை எப்படி எடுத்துச் சென்றார் என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதே போல கடந்த வாரம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் தீக்குளிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.


Next Story