ஊட்டியில் குடிநீர் தட்டுப்பாடு: பெண்கள் சாலைமறியல் செய்ய முயற்சி
ஊட்டி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் டைகர்ஹில் அணை, தொட்டபெட்டா அப்பர் அணை, கோடப்பமந்து அணை உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் குறைந்த அளவே உள்ளது.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஊட்டி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் டைகர்ஹில் அணை, தொட்டபெட்டா அப்பர் அணை, கோடப்பமந்து அணை உள்ளிட்ட அணை களில் தண்ணீர் குறைந்த அளவே உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் ஊட்டி எச்.எம்.டி. பகுதிக்கு கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளானார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்ய திரண்டனர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள், உங்கள் கோரிக்கை குறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கலாம் என்றனர்.
இதனால் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவியை சந்தித்து மனு அளித்தனர். அதில், எங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே 3–வது குடிநீர் திட்டத்தின் கீழ் தேவையான அளவு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீதிகள் குறுகியதாக உள்ளதால் லாரி மூலம் குடிநீர் வினியோகிக்க முடியாது. எனவே போதுமான குழாய்களை பதித்து குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.