பெங்களூரு மாநகராட்சிக்கு தனிச்சட்டம் இயற்ற கர்நாடக அரசு முடிவு
பெங்களூரு மாநகராட்சிக்கு தனிச்சட்டம் இயற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது என்று மாநகராட்சி கூட்டத்தில் மாநகராட்சியின் கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.
பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி கட்டிட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாநகராட்சி மேயர் பத்மாவதி, மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத், துணை மேயர், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி எழுப்பிய கேள்விக்கு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் பதில் அளித்து பேசியதாவது:-
பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள் கட்டிட விதிமுறைகளில் மண்டல கட்டுப்பாட்டு அதிகாரத்தை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதை அமல்படுத்தும் அதிகாரம் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், அதுவும் இறுதியானது அல்ல. இதுதொடர்பான புதிய சட்டம் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதித்து முடிவு எடுக்கப்படும்.
அதேபோல், மண்டல கட்டுப்பாட்டு அதிகாரம் தொடர்பான விஷயங்களும் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். கர்நாடக நகராட்சிகள் சட்டப்படி உள்ளாட்சி அமைப்புகளில் ஒரே மாதிரியான சட்ட விதிமுறைகளை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், இது பெங்களூருவுக்கு பொருந்தாது. எனவே, பெங்களூரு மாநகராட்சிக்கு தனிச்சட்டம் இயற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
எதிர்க்கட்சி தலைவர் கேள்வி
முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி கேள்வி எழுப்பி பேசியதாவது:-
பெங்களூரு மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி அதிகாரத்தை மாநில அரசு பறிக்க முயற்சி செய்கிறது. இதனால், பெங்களூருவுக்கு தனிச்சட்டம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. மண்டல கட்டுப்பாட்டு அதிகாரத்தின்படி 40 அடி ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பு, சமுதாய பவன், நட்சத்திர ஓட்டல் கட்ட நீங்கள் அனுமதி கொடுப்பீர்களா?. இதற்கு முன்பு, மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் வர்த்தகங்கள் நடைபெற கூடாது என்று மாநகராட்சி நோட்டீசு கொடுத்தது. இப்போது நீங்களே தனிச்சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளர்கள். அரசின் இந்த முடிவு கர்நாடக நகராட்சிகளின் சட்டத்திற்கு முரணானது.
பெங்களூருவில் 28 எம்.எல்.ஏ.க்கள், 5 எம்.பி.க்கள், 198 வார்டு மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்கள் யாருடனும் கலந்து ஆலோசனை நடத்தாமல் அரசு இந்த தனிச்சட்டத்தை கொண்டு வர முயற்சித்து வருகிறது. இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு இதுபோன்ற முடிவுகளை எடுப்பதாக இருந்தால் தாங்கள் எதற்காக இருக்க வேண்டும். மாநகராட்சியை கலைத்து விடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story