கடந்த 6 மாதத்தில் சாலை விபத்துகளில் 6,394 பேர் உயிரிழப்பு


கடந்த 6 மாதத்தில் சாலை விபத்துகளில் 6,394 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 1 Aug 2017 3:35 AM IST (Updated: 1 Aug 2017 3:35 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கடந்த 6 மாதத்தில் சாலை விபத்துகளில் சிக்கி 6 ஆயிரத்து 394 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பை,

நாட்டில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் மராட்டியமும் ஒன்று. இங்கு தினமும் சுமார் 35 பேர் விபத்தில் சிக்கி உயிரிழப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மராட்டிய போலீசார் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மராட்டியத்தில் கடந்த 6 மாதங்களில் 18 ஆயிரத்து 730 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 579 பயங்கர விபத்துகள் ஆகும். இந்த விபத்துகளில் சிக்கி 6 ஆயிரத்து 394 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனினும் விபத்து மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. அதாவது கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை மராட்டியத்தில் 21 ஆயிரத்து 365 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 7 ஆயிரத்து 11 பேர் பலியாகினர். எனவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 718 குறைந்துள்ளது.

ரூ.73¾ கோடி அபராதம் வசூல்

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சூப்பிரண்டு விஜய் பாட்டீல் கூறியதாவது:- விதிகளை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி அபராதம் விதித்து வருவதால் தான் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, முதல் 6 மாதத்தில் விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய சுமார் 44 லட்சம் பேரிடம் ரூ.54 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.73¾ கோடி அபராதம் வசூலாகி உள்ளது.

மேலும் விபத்துகளை குறைக்க குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க பொதுப்பணித்துறைக்கு கடிதம் எழுதி உள்ளேன். கனரக வாகன ஓட்டிகள் இடதுபுறம் செல்லாமல் சாலையின் வலது ஓரத்தில் செல்வதாலும் அதிக விபத்துகள் நடக்கின்றன. பெரும்பாலான விபத்துகள் மனித தவறுகளால் தான் நடக்கின்றன. வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே முக்கியமானது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story