திருவாடானை தாலுகாவில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை
திருவாடானை தாலுகாவில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக முதல்–அமைச்சர் பழனிச்சாமி உறுதி அளித்துள்ளதாக கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
தொண்டி,
திருவாடானை தாலுகாவில் கடந்த ஆண்டு விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கும் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் மங்கலக்குடி, புல்லூர், திருவாடானை உள்பட பல பிர்க்காக்களில் விவசாயிகளுக்கு சுமார் 25 சதவீதம் மட்டுமே பயிர் இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து இருந்தும் இழப்பீட்டு தொகை வழங்கும் பட்டியலில் முழுமையாக பெயர்கள் விடுபட்டுள்ளது.
இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து பல்வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதவிர இப்பகுதி விவசாயிகள் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கிட போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் திருவாடானை யூனியனில் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்த கருணாஸ் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஆணிமுத்து ஆகியோர் கடந்த ஆண்டு இந்த தாலுகாவில் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதை வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை அதிகாரிகள் புகைப்படத்துடன் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். ஆனால் பயிர் காப்பீட்டு நிறுவனம் சரியான தகவல் இல்லாமல் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க மறுத்துள்ளது. எனவே தமிழக முதல்–அமைச்சரை நேரில் சந்தித்து இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டதற்கான அறிக்கையுடன் கோரிக்கை விடுப்பதாகவும், மேலும் உடனடியாக இப்பகுதி விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றும் உறுதியளித்தனர்.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அமைச்சர் மணிகண்டன், கருணாஸ் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆணிமுத்து, ஒன்றிய செயலாளர் மதிவாணன், கூட்டுறவு சங்க தலைவர்கள் காசிராம், ராமநாதன், பவுல் மெல்கியோர், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தனர்.
அப்போது திருவாடானை தாலுகாவில் கடந்த ஆண்டு சுமார் 48 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் நடைபெற்றது. ஆனால் போதிய மழை பெய்யாததால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும், வங்கிகள் மற்றும் அடகு கடைகளில் வைத்த நகைகளை மீட்க முடியாமலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்பட்ட வறட்சி நிவாரண தொகையும் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. இருந்தபோதிலும் பயிர் காப்பீடு கை கொடுக்கும் என மிகப்பெரிய கனவுகளுடன் விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால் பயிர் காப்பீட்டிற்கான இழப்பீட்டு தொகை குறித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விபரங்களை அறிந்த விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதில் திருவாடானை தாலுகாவில் மங்கலக்குடி, புல்லூர் உள்பட பல்வேறு பிர்க்காக்களில் பல வருவாய் கிராமங்கள் முழுமையாக பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை பட்டியலில் விடுபட்டுள்ளது. எனவே தமிழக அரசு திருவாடானை தாலுகா விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை முழுமையாக கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை நேரில் வழங்கினர்.
இதுகுறித்து கருணாஸ் எம்.எல்.ஏ. கூறும்போது, நாங்கள் அளித்த மனுவை பெற்றுக்கொண்ட முதல்–அமைச்சர் திருவாடானை தாலுகாவை சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். எனவே விரைவில் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.