ஜி.எஸ்.டி.வரிக்கு ஆண்டு வர்த்தகம் ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டும்


ஜி.எஸ்.டி.வரிக்கு ஆண்டு வர்த்தகம் ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டும்
x
தினத்தந்தி 2 Aug 2017 5:00 AM IST (Updated: 2 Aug 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி.வரிக்கு ஆண்டு வர்த்தகம் ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கூறினார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி வட்டார சிறு வியாபாரிகள் சங்கம் சார்பில் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜி.எஸ்.டி) குறித்த விழிப்புணர்வு மற்றும் விளக்க கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதற்கு சங்கத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். செயவாளர் ஹரி கிருஷ்ணன், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அகில இந்திய வணிக சம்மேளத்தின் தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு ஜி.எஸ்.டி வரி விதிப்பின் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரமைப்பு கோவை மண்டல தலைவர் சந்திரசேகரன், மாவட்டத் தலைவர் இருதயராஜா, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன், பொள்ளாச்சி வியாபாரிகள் சங்க செயலாளர் சேதுபதி, ஜி.எஸ்.டி.ஆலோசகர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதன் சட்ட விதிகளை திருத்தம் செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம். ஆண்டு வர்த்தகம் ரூ.20 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் ஜி.எஸ்.டி.வரியின் கீழ் பதிவு செய்ய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு வணிகர்கள் பாதிப்படைவார்கள். அந்த தொகையை அதிக பட்சமாக ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால் 10 லட்சம் வியாபாரிகள் பாதிப்படைவார்கள்.

ஜி.எஸ்.டி–யில் திருத்தம் செய்யக் கோரி வருகிற 8–ந்தேதி தமிழ்நாடு முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும். இதற்கு முன்னதாக வருகிற 3–ந் தேதி கர்நாடகாவில் தென்னக மாநிலங்களின் வியாபார பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தி போராட்டங்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். இதில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் வியாபார அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். வருகிற 5–ந் தேதி டெல்லியில் நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி விதிமுறைகளை மாற்றித்தருவதாக முதல்–அமைச்சரும், நிதி அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.

மளிகைப் பொருட்கள், கடலை மிட்டாய் போன்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இரும்பு, டயர் ஆகியவற்றுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. 585 வகையான மளிகைப்பொருட்களுக்கு வரி விலக்கு இருந்தது. அவைகள் தற்போது ஜி.எஸ்.டி.யில் 100–ஆக குறைக்கப்பட்டுள்ளன. புதிதாக 509 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு காரணமாக வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிப்படைவார்கள். விலைவாசியும் உயரும். பான்பராக், குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று வியாபாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம். அவைகளை உற்பத்தி செய்யும் இடங்களிலேயே தடுக்க வேண்டும். மேலும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று வியாபாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story