தனியார் நிறுவனங்களுக்கு அள்ளிக்கொடுத்துவிட்டு ஏழை மக்களுக்கு வழங்கும் சலுகைகளை மத்திய அரசு பறித்து வருகிறது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு


தனியார் நிறுவனங்களுக்கு அள்ளிக்கொடுத்துவிட்டு ஏழை மக்களுக்கு வழங்கும் சலுகைகளை மத்திய அரசு பறித்து வருகிறது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 Aug 2017 7:30 AM IST (Updated: 2 Aug 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவனங்களுக்கு அள்ளிக்கொடுத்துவிட்டு ஏழை மக்களுக்கு வழங்கும் சலுகைகளை மத்திய அரசு பறித்து வருகிறது என்று கோவையில் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

கோவை,

கோவை ஆவாரம்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக அந்த கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோவை வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதும் சமையல் எரிவாயுவுக்கு அளிக்கப்பட்ட மானிய தொகையை வங்கியில் டெபாசிட் செய்வோம் என்று அறிவித்தபோதே, மானிய தொகையை நிறுத்துவதற்கான முன்னோட்டம் என்று நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தோம். தற்போது அது உறுதியாக்கப்பட்டு உள்ளது. சமையல் எரிவாயு விலையை மாதந்தோறும் ரூ.4 உயர்த்துவது என்று அறிவித்து உள்ளது கண்டிக்கத்தக்கது. அதை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

அதுபோன்று ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ரே‌ஷன் பொருட்கள் கிடையாது என்று அறிவித்து உள்ளதையும் ஏற்க முடியாது. அரசின் முடிவின்படி ஒருவர் மாதந்தோறும் ரூ.8 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் வாங்கினால் அவர் ரே‌ஷன் பொருட்களை வாங்க முடியாது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஒட்டுமொத்தமாக பொதுவினியோக முறையை சீர்குலைக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இதை மாநில அரசு அமல்படுத்த முயற்சி செய்து வருகிறது.

மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப கொடுக்காதது ரூ.7 லட்சத்து 11 ஆயிரம் கோடி ஆகும் என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்தது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் இந்த நிறுவனங்களுக்கு அளித்த சலுகை ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் கோடி ஆகும்.

இவ்வாறு தனியார் நிறுவனங்களுக்கு கோடி கோடியாக அள்ளிக்கொடுத்துவிட்டு, ஏழை–எளிய மக்களுக்கு கிடைக்கும் சலுகைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து சென்னையில் நடைபெறும் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பலர் இறந்து விட்டனர். ஆனால் அதை அரசு மறைத்து வருகிறது. எனவே இந்த காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சையையும், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கவும் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் போராட்டம் நடத்தும் மக்களின் கோரிக்கையை அரசு காது கொடுத்து கேட்க வேண்டும். அதற்கு பதிலாக அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதை அனுமதிக்க முடியாது. குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்தி வருவது ஜனநாயக விரோதமானது. நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற மாநில அரசு தீவிரமாக முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story