திருமங்கலம் பஸ் நிறுத்தத்தில் கேட்பாரற்று கிடந்த பெண் குழந்தை
திருமங்கலம் பஸ் நிறுத்தத்தில் கேட்பாரற்று கிடந்த பெண் குழந்தையை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
திருமங்கலம்,
திருமங்கலத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் வெளியூர் பஸ் நிறுத்தம், நகர் போலீஸ் நிலையம் முன்பு உள்ளது. அங்கு பயணிகள் அமர்வதற்காக நிழற்குடை அமைக்கப்பட்டு, அதில் பயணிகள் உட்கார இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 30–க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ் ஏறுவதற்காக நின்றிருந்தனர். அப்போது பஸ் நிறுத்த பகுதியில் குழந்தை அழும் குரல் கேட்டது. உடனே அங்கிருந்த பயணிகள் திடுக்கிட்டனர். உடனே குழந்தையின் அழுகுரலை வைத்து தேடினர். அப்போது பஸ் நிறுத்த இருக்கைகளின் பின்புறம் ஒரு பெண் குழந்தை வேட்டியால் சுற்றப்பட்டு கிடந்தது. உடனே அந்த குழந்தையை எடுத்த பயணிகள், இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி வந்த போலீசார் குழந்தையை மீட்டு, திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்து பால் கொடுத்தனர். பின்னர் அந்த குழந்தை மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து மறவன்குளம் கிராம நிர்வாக அதிகாரி பாண்டியராஜன், திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை போட்டுவிட்டு சென்ற கல் நெஞ்சம் படைத்த தாயை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் பெண் குழந்தை என்பதால் விட்டு சென்றனரா அல்லது வேறு எங்கும் இருந்து குழந்தையை கடத்தி வந்து நள்ளிரவு ஆனதால் போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என்ற பயத்தில் விட்டு சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.